‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வாலாஜாபாத்தில் அரசு மகளிர் கல்லூரி வேண்டும்: மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், காஞ்சி நெசவாளர்களை திமுக கைவிடாது என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசார கூட்டங்களில், அந்தந்த பகுதி பிரச்னைகளை பொதுமக்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் 4 கட்ட பிரசாரத்தை முடித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 5ம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து மாலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் கலைஞர் திடலில் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்துக்கு காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், புகழேந்தி, ஆர்.டி.அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்து பொதுமக்கள் பேசியதாவது:

துரைசாமி, உத்திரமேரூர் தொகுதி: படூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் கவனிக்கப்படுவதில்லை. 25 லட்சம் மதிப்பீட்டில அலுவலக கட்டிடப் பணியில் கூட்டுறவு சங்க அதிகாரி தன்னிச்சையாக செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருள் பரமானந்தம், மதுராந்தகம் தொகுதி: திமுகவினர் உயிரை துச்சமென மதித்து கொரோனா காலங்களில் நிவாரண பணிகளில் ஈடுபட்டீர்கள். இதை பொதுமக்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள். பாலாற்றில்  உரிய இடத்தில் தடுப்பணைகள் கட்டி விவசாயத்துக்கான நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் சாலை ஓரத்தில் பூங்கா அமைக்க வேண்டும். 100 நாளில் இந்த திட்டங்களை செய்தால் 100 ஆண்டுகாலம் உங்கள் புகழ் நிலைத்திருக்கும். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து அடிக்கடி இன்டர்வியூ வரும். ஆனால் தற்போது யாருக்கும் இண்டர்வியூ வருவது இல்லை. எனவே, இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்கொடி, உத்திரமேரூர் தொகுதி: நான் 280 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலைவியாக இருக்கிறேன். வாலாஜாபாத்தில் இருந்து பெண்கள் கல்லூரிக்கு செல்ல காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வாலாஜாபாத்தில் மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர், மதுராந்தகம் தொகுதி : மதுராந்தகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருந்ததால் விவசாயிகள் ஓரளவு சிறப்பாக இருந்தார்கள். ஆனால் தனியார் சர்க்கரை ஆலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படுத்தப்படாமல் இருந்தது. பிறகு திமுக ஆட்சியின் போது சீரமைக்கப்பட்டது. ஆனால் மறுபடியும் 10 ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் காட்டுப் பன்றி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையம் அனைத்துப் பகுதிகளிலும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவானந்தம், உத்திரமேரூர் தொகுதி : பென்னலூர் பகுதியில் மயான பாதை இல்லாமல் காலங்காலமாக போராடி வருகிறோம். மயானப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்து, காஞ்சிபுரம் தொகுதி: காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 15 ஆயிரம் நெசவாளர்கள், தனியாராக 35 ஆயிரம் நெசவாளர்கள் என  சுமார் 50 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 28 நெசவாளர் சங்கங்களில் நெசவாளர்கள் வாங்கியுள்ள காசுக்கடன்  50 கோடியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் ₹5 கோடி மதிப்பிலான பட்டுச் சேலைகள் தேங்கியுள்ளன. அதனை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2005ம் ஆண்டில் நெசவாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டு இன்றுவரை அது நடைமுறைப்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பட்டுப் பூங்கா திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.விஸ்வநாதன், செய்யூர் தொகுதி : நாங்கள் மரமேறும் சமூகத்தை சேர்ந்தவர்கள். கள் உணவுப்பொருளாக அறிவிக்கப்பட வேண்டும். பனைவெல்லம், பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு அதிக அளவில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சில விஷயங்கள் 100 நாளில் நிறைவேற்றப்படும். சில விஷயங்களில் மத்திய அரசுடன் ஆலோசித்து அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய இடத்தில் தடுப்பணைகள் கட்டப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும். சாகும்போது சங்கரா, சங்கரா என்ற கதையாக நான் அறிவிக்கின்ற திட்டங்களை தேர்தல் அறிவிக்கின்ற கடைசி நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 அறிவிப்பின் கீழ் செய்துகொண்டிருக்கிறார். விளக்கு அணையும்போது பிரகாசமாக எரிவதுபோல்  செய்து கொண்டிருக்கிறார். நெசவாளர்கள் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு கொடுத்துள்ள மனுக்கள் அனைத்திற்கும் ஒப்புகைச் சீட்டு கொடுக்கப்படுகிறது. இந்த சீட்டை வைத்துக் கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து முதலமைச்சரை சந்திக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: