சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சாலையோர கடைகள் மற்றும் வீடுகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே வெங்கல் பஜார் பகுதி மற்றும் பாகல்மேடு கிராம பகுதியில் சாலையையொட்டி கடைகள் மற்றும் வீடுகள்  அதிக அளவு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், பெரியபாளையத்தில் இருந்து தாமரைப்பாக்கத்திற்கும், திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து பெரியபாளையத்திற்கு வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை  அகற்ற வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், திருவள்ளூர் நெடுஞ்சாலை அதிகாரிகள் தலைமையில், திருவள்ளூர் தாசில்தார் மற்றும்  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, வெங்கல் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி ஆகியோர் நேற்று 5 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வெங்கல், பாகல்மேடு பகுதிகளில்  கடைகள் மற்றும் வீடுகளை  அகற்றினர். அப்போது, வெங்கல் பகுதி வியாபாரிகள்,  “எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென கடைகளை அகற்றுகிறீர்களே” என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, போலீசார், “ஏற்கனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறினர். இதை கேட்ட வியாபாரிகள், “மேலும் கூடுதலாக அவகாசம் கொடுங்கள்” என்றனர். இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், “இனி அவகாசம் கொடுக்க முடியாது” என கூறி கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர். இதனால், வெங்கல், பாகல்மேடு பகுதிகளில்  பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories:

>