உறவினர் வீட்டில் 23 சவரன் திருட்டு: பெண் உட்பட இருவர் கைது

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மீனா(36).   இவர்களது மகனுக்கு புற்றுநோய் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கேயே இருவரும் தங்கி சிகிச்சையளித்து வந்தனர். மேலும், மீனாவின் வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் மற்றும் வயதான தாய், தந்தை ஆகியோரை பார்த்துக்கொள்ள மீனாவின் உறவினர் ஆரம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(36)  என்பவரை  வரவழைத்தனர். இந்நிலையில், மீனா மகனின் மருத்துவ செலவிற்காக வீட்டில் இருந்த 22.1/2 சவரன் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார். அப்போது, நகைகளை காணவில்லை. இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறினார்.  

இதில், சந்தேகமடைந்த மீனா இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கார்த்திக்கிடம் விசாரித்தபோது அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.  மேலும், அந்த நகைகளை தனது அத்தை சாந்தி(46) மூலம் 7 சவரன் நகையை ஆரம்பாக்கத்தில் உள்ள வங்கியில் 1.50 லட்சத்திற்கு அடகு வைத்ததும் தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் மீட்டனர். மேலும், மீதமுள்ள 16  சவரன் நகைகளை தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தின் கீழ் புதைத்து வைத்திருப்பதை கார்த்திக் காட்டினார்.  அவற்றையும் போலீசார் மீட்டு கார்த்திக் மற்றும் சாந்தியை கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: