உள்ளதும் போச்சா? குமரி அதிமுகவினர் கலக்கம்

குமரி மாவட்டம் இனயத்தில் ரூ.28 ஆயிரம் கோடியில் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க  மத்திய அரசு கடந்த 2016ல் பணிகளை தொடங்கியது. மத்திய அரசு மீனவர்களை அழிக்கும் வகையில், சரக்கு பெட்டக மாற்று முனையத்தை அமைப்பதாக குமரி மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்களும் நடந்தன. இதை தொடர்ந்து, இந்த திட்டத்தை கன்னியாகுமரி அருகே செயல்படுத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இங்கும் போராட்டம் வெடித்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் துறைமுகம் பெயரில் மீனவ கிராமங்களை அழிக்க நினைக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியமானதாகும். பாஜ ஆட்சி மீண்டும் மத்தியில் வந்தாலும் கூட, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறாததால் துறைமுக திட்டம் கிடப்பில் கிடந்தது.

கன்னியாகுமரி அருகே பொது மற்றும் தனியார் பங்களிப்பு  திட்டத்தில் 65 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் பசுமை துறைமுகம்  அமைத்தல் பணிகளுக்கு, துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்றை  தூத்துக்குடி வ.உ.சி துறைமுக சபை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ.வுடன் கூட்டணி என்பதே அதிமுகவுக்கு பின்னடைவு ஆகும். இதில் துறைமுக பிரச்னை வேறு எழுந்திருப்பதால், கடலோர பகுதிகளில் அதிமுகவுக்கு கிடைக்கிற ஓட்டும் கிடைக்காது என அதிமுக தொண்டர்களே குமுறுகின்றனர்.

Related Stories: