மாவட்ட வாரியாக உளவுத்துறை மூலம் அறிக்கை பெறும் அதிமுக முதியோர்களின் தபால் வாக்குகள் எவ்வளவு?

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்க உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்பு 1500 வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலை இருந்தது. தற்போது ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த முதியோர் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஆளும் அதிமுக களத்தில் இறங்கி உள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறை மூலம் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து 80 வயதை கடந்த முதியோர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு, ஒவ்வொரு சட்டமன்றத்தில் உள்ளவர்களின் விவரங்கள் சேகரித்து வருகின்றனர். நேரடியாக தேர்தல் அதிகாரிகளிடம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் விவரங்கள் கேட்டால் விவரம் வெளியே தெரிந்துவிடும். இதை தவிர்க்கும் வகையில் உளவுதுறை மூலம் சேகரித்து அதிமுக தலைமையிடம் கொடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். அதிகாரிகளின் துணையுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். முதியோர் தபால் வாக்குகளை கண்காணிக்க இதற்காக சட்டமன்ற வாரியாக அதிமுக நிர்வாகிகள் பணிகளை கவனித்து வருகின்றனர்.

Related Stories: