நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

ஓவைசி பிரசாரத்துக்கு போலீஸ் வைத்த செக்

பீகாரில் முஸ்லிம் ஓட்டுகளை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு போக விடாமல் தடுத்து, பாஜ- ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத்தை தலையிடமாக கொண்டிருந்தாலும், தேர்தல் நடக்கும் மாநிலங்களின் பிராந்திய கட்சிகள் எல்லாம் இப்போது இவரை பார்த்து நடுங்குகின்றன. குறிப்பாக, முஸ்லிம் ஓட்டுகளை பெரிதாக நம்பியிருக்கும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாகி விட்டார். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஆளும் திரிணாமுல்லுக்கும் பாஜ.வுக்கும் இடையே, ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற போட்டி கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த மாநிலத்திலும் வேட்பாளர்களை நிறுத்துகிறார் ஓவைசி. முஸ்லிம் ஓட்டுகளை பெரிதும் நம்பியிருக்கும் முதல்வர் மம்தாவுக்கு இது, சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருந்த ஓவைசிக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணமாக காட்டி மேற்கு வங்க போலீசார் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். இதனால், ‘பாஜ.வின் பி டீம்’ என்ற பெயரை கொண்ட ஓவைசி, சட்ட நிபுணர்களின் உதவியை நாடி வருகிறார்.

நாங்க மட்டும் சும்மாவா...

தேர்தல் நேரங்களில் ஆதரவாளர்களை திரட்டவும், மக்கள் மனதில் இடம் பெறவும் ரத யாத்திரை செல்வது பாஜ.வின் வழக்கம். ‘நாங்க மட்டும் சும்மாவா’ என்று காங்கிரசும் அசாமில் ‘பேருந்து யாத்திரை’ என்ற பெயரில் கிளம்பியுள்ளது. மாநிலத்தின் 4 முக்கியப் பகுதிகளிலிருந்து, ‘வாருங்கள்…. அசாமைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் இதற்காகப் பல பேருந்துகள் கிளம்பியுள்ளன. வாக்காளர்களை சந்திப்பது, மக்களின் குறைகளைக் கேட்பது, பாஜ ஆட்சியின் தோல்விகளை எடுத்துரைப்பது போன்றவை இதில் முக்கிய பிரசாரங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.  ‘பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்ள இந்த பேருந்து யாத்திரை உதவி வருகிறது. மாநிலம் முழுவதும் பாஜ.வுக்கு எதிரான அலை வீசுவதையும் உணர்கிறோம்’ என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இதுபற்றி உற்சாகமாகக் கூறி வருகிறார்கள். ஆனால், பேருந்து யாத்திரையை கிண்டலடிக்கும் பாஜ.வினர், ‘காங்கிரசிடம் இருந்துதான் அசாமை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறி வருகின்றனர்.

கட்சி மாறியவர்களின் காட்சிகள் மாறுமாம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை போட்டியிட புதியவர்கள் அதிகளவில் வாய்ப்பு கேட்டுள்ளனர். இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தேசிய, மாநில  கட்சி தலைமைகள் ஆலோசித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தொகுதி வாரியாக  களமிறங்கும் வேட்பாளர்களின் விபரமும், வெற்றி வாய்ப்புள்ளவர்களின்  பட்டியலும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பிரதான கட்சிகள் இத்தேர்தலில் கட்சி, அணி மாறியவர்களுக்கு கல்தா கொடுக்கும்  திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. போட்டியிட  அவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றாலும் கடைசி நேரத்தில் காலை  வாரிவிடும் முடிவில் சில கட்சித் தலைமை இருக்கின்றன. இதனால், எந்தெந்த தொகுதியில்  யார், யார் களமிறங்குவார்கள் என்பது வேட்பு மனு தாக்கலுக்கு பிறகே தெரியும் என கூறுகின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் பாஜ

‘வாரிசு அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும். அதனால்தான் இந்திய அரசியலே கெட்டு போய் விட்டது,’ என்று கூறி வரும் பாஜ, கேரளாவில் சத்தமில்லாமல் வாரிசு அரசியலுக்கு அடிக்கல் நாட்டி வருகிறது. அங்கு ஜனபக்ஷம் கட்சியை நடத்தி வந்த பி.சி. ஜார்ஜ், கடந்த மக்களவை தேர்தலில் பாஜ. கூட்டணியில் இருந்தார். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர ஆர்வம் காட்டினார். காங்கிரஸ் பெருந்தலைகள் இவருக்கு ஆதரவாக இருந்தாலும், முஸ்லிம்கள் குறித்த அவரது அறிக்கைகள், பாஜ உடனான தொடர்புகள் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் உள்ளூர் நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜார்ஜ் சேர்ந்தால், 6 முறை அவர் எம்எல்ஏ.வாக இருக்கும் பூஞ்சார் தொகுதியை அவருக்கே ஒதுக்குவதுடன், கஞ்சிரபாரா தொகுதியில் அவரது மகன் ஷோன் ஜார்ஜையும் நிறுத்துவததாக தூபம் போட்டுள்ளது பாஜ. ‘தனக்கு தேவை என்று வந்தால், எதையும் செய்தும் கொள்ளலாம்,’ என்ற பாஜ.வின் மனநிலையையே இது காட்டுவதாக கேரள அரசியல் தலைவர்கள் புலம்புகின்றனர்.

Related Stories: