தொகுதி பிரச்சனைக்காக சட்டமன்றத்தில் ஒலிக்காத குரல்! -பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசு

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கோவிந்தராசு உள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலின் போது இவரை எதிர்த்து திமுக சார்பில் அசோக்குமார் போட்டியிட்டார். பேரூராட்சியின் தலைவராக இரண்டுமுறை வெற்றி பெற்ற அசோக்குமாருக்கும், கோவிந்தராசுக்கும் இடையே கடும் போட்டிக்கிடையில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் கோவிந்தராசு வெற்றி பெற்றார். இவரது வெற்றியை அதிமுகவினரே நம்பவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதிகளை அள்ளிவீசிய சிட்டிங் எம்எல்ஏ கோவிந்தராசு எதையாவது செய்திருக்கிறாரா என்று பூதக்கண்ணாடி போட்டு தேடும் நிலையில்தான் தற்போது பேராவூரணி தொகுதி நிலவரம் உள்ளது. தொகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருச்சிற்றம்பலம் தனி தாலுக்கா, அரசு தொழிற்பயிற்சி கல்லூரி, பாதாள சாக்கடை திட்டம், மீனவர்களுக்கு தூண்டில் வளைவு, நீதிமன்றம், தென்னை சார்ந்த தொழிற்பேட்டை, பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் வைரத்தேர் செல்ல தேரோடும் வீதி இப்படி எண்ணற்றவை என தேர்தல் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம். சோதனை என்னவென்றால் இதில் ஒன்று கூட நிறைவேறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தொகுதி பிரச்னைக்காக சட்டமன்றத்தில் சிட்டிங் எம்எல்ஏ குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. ஆக்டிவ் இல்லாத எம்எல்ஏ கோவிந்தராசு என்பது தொகுதியில் அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இவரது வீட்டிற்கு  அதிமுகவினர் மட்டுமல்லாமல் முக்கிய பிரமுகர்கள் கூட பார்க்க வந்தால் எம்எல்ஏவை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு எம்எல்ஏ வெளியே போய்விட்டார் என அவரது மனைவி திருப்பி அனுப்பிவிடுவார்.  தொகுதி சம்பந்தமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் செல்போன் பாதிநேரம் ஸ்விட்ச் ஆப்பில் தான் இருக்குமாம். அப்படியே செல்போனை ஆன் செய்து வைத்திருந்தாலும் எம்எல்ஏ எடுத்து பேசமாட்டார் என அதிமுக தொண்டர்களே கூறுகின்றனர். ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருந்த இவர், தேர்தல் வாக்குறுதிகளை தொகுதி மக்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருந்தால் கூட தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால் எம்எல்ஏவுக்கு தேவையானதை மட்டும் அவர் செய்துகொண்டார் என்பதும் தொகுதி மக்களின் குற்றச்சாட்டு.

‘நீதிமன்றம் இல்லாத ஒரே தொகுதி

பேராவூரணி தான்’

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் கூறும்போது, ‘நீதிமன்றம் கொண்டு வருவேன் என்றார் எம்எல்ஏ. அது காற்றில் பறந்த கதையாக தான் உள்ளது. தமிழகத்திலேயே தாலுக்கா  தலைநகரில் நீதிமன்றம் இல்லாத ஒரே தொகுதி பேராவூரணி தொகுதியாகத்தான் இருக்கும். பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவேன் என்றார். அதற்காக சிறு முயற்சி கூட  இதுவரை எம்எல்ஏ எடுக்கவில்லை. திருச்சிற்றம்பலத்தை தனி தாலுக்காவாக ஆக்குவேன் என வாக்குறுதியாக அளித்தார். ஆனால் இதுவரை இதுபற்றி வாயே திறக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியின்போது எதை எதையோ  செய்வதாக எம்எல்ஏ சொன்னார். ஆனால் எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை’ என்றார்.

‘மனசாட்சிக்கு பயந்து  பணியாற்றியிருக்கிறேன்’

பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசு கூறும்போது, ‘கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக பல  இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளன. உயர்மட்ட பாலங்கள்  கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. நீதிமன்றம் தொடங்குவதற்கான அறிவிப்பை  சட்டமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக மாவட்ட கலெக்டர், நீதிபதி, சார்  ஆட்சியர் ஆகியோர் நீதிமன்றம் அமையவுள்ள கட்டிடத்தை பார்வையிட்டனர். கொரோனா  வந்ததால் நீதிமன்றம் திறப்பு தள்ளிப்போய்விட்டது. ஒரு சாதாரண தொண்டன்  எம்எல்ஏ ஆனதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என் மீது அவதூறு பரப்புகின்றனர்.  நான் ஏற்றுக்கொண்ட பதவிக்கு களங்கம் ஏற்படாத வகையில் மனசாட்சிக்கு பயந்து  பணியாற்றியிருக்கிறேன்’ என்றார்.

Related Stories: