தலைவர்கள் தடம் பதிந்த வேலூர் கோட்டை

வடாற்காடு மாவட்டத்துக்கு 1927 ஆகஸ்ட் 30ம் தேதி மகாத்மா காந்தி வருகை தந்தார். இதற்காக அன்று காலை மகாத்மாவை சுமந்து கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய பெங்களூர் மெயில் ரயில் மதியம் சுமார் 12 மணிக்கு காட்பாடி சந்திப்பை அடைந்தது. பெங்களூர் மெயில் ரயிலில் இருந்து இறங்கிய மகாத்மா காந்திஜியை வி.டி.கண்ணப்ப முதலியார் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் மாலைகளுடன் எதிர்கொண்டனர். இதனால் காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டி காட்பாடி- சித்தூர் சாலை மக்கள் வெள்ளமாகவே காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் கோட்டை மைதானத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவரை தொடர்ந்து 1940களில் ஜவகர்லால் நேரு தனது மகள் இந்திராகாந்தியுடன் கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அதேபோல் காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரும் கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து, பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணா, 1949ம் ஆண்டு வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் தி.மு.கவை ஆரம்பிப்பதற்கான நோக்கங்களை விளக்கி பேசினார். அதன் பின்னரே 17.9.1949ம் ஆண்டு தி.மு.க தொடங்கப்பட்டது. அதன்பிறகு நடந்த அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின் போது, அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ப.கல்யாணசுந்தரம், ஜெயலலிதா, விஜயகாந்த் என பல தலைவர்களும் வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் தங்கள் பிரசாரங்களை நடத்தியுள்ளனர்.

Related Stories: