நாமக்கல் அருகே காவலாளியை தாக்கி விட்டு கோயிலில் நகை கொள்ளையடித்து தப்பிய 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் பிரசித்தி பெற்ற சேத்துக்கால் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு இரவு காவலாளியாக இருப்பவர் கணேசன்(50). நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும் 9 மணிக்கு பூசாரி மணிகண்டன் கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று அதிகாலை கோயில் வளாகத்தில் படுத்திருந்த கணேசனை, 3 பேர் கும்பல் எழுப்பி சரமாரியாக தாக்கினர். இதில், நிலைகுலைந்த அவரை, அங்கிருந்த ஒரு அறையில் தள்ளி அடைத்தனர். பின்னர், கோயிலுக்குள் புகுந்து அம்மன் நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர். பின்னர் கணேசன், தனது செல்போன் மூலம் ஊர் மக்களை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் கோயிலுக்கு வந்து கணேசனை மீட்டனர். தகவலறிந்த பரமத்தி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, அதிகாலை 4 மணியளவில், ஜெர்கின் கோட் மற்றும் முகம் தெரியாத அளவிற்கு ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர், கணேசனை தாக்கி ஒரு அறையில் தள்ளி பூட்டி விட்டு, கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, பொட்டு மற்றும் மூக்குத்தி, வெள்ளி கிரீடம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ., தொலைவில், கீரம்பூர் கிராமத்திற்கு அருகே சுங்கச்சாவடி பகுதியில், நேற்று அதிகாலை டூவீலரை நிறுத்தி விட்டு 3 பேர் பேசிக்கொண்டிருந்தனர். கிராம மக்கள் சந்தேகமடைந்து, விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, சுவாமி நகை இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது, ‘நாங்கள் மதுரையைச் சேர்ந்த கொள்ளையர்கள். எங்களை போலீசில் பிடித்துக் கொடுத்தால், சும்மா விட மாட்டோம்’ என மிரட்டினர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், தர்ம அடி கொடுத்து, கட்டிப்போட்டு பரமத்தி போலீசாரை வரழைத்து ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் கோயிலில் கொள்ளையடித்தவர்கள் என்றும், மதுரையைச் சேர்ந்த முருகசுந்தம், ராஜூ, கருப்பசாமி என்றும் தெரிந்தது. கொள்ளையர் பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>