பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றச்சாட்டில் அதிகாரிகள், பிரமுகர்கள் சிக்குவது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.   கடவுள் போல அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறை நிறைந்துள்ளது என்று  பெண் எழுத்தாளர் ஒருவர்  பதிவு செய்திருப்பதும் பாதிப்பின் வெளிப்பாடு தான். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று பாரதி பாடிய வரிகளின் வலிமையை அனைவரும் உணர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.  ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் கோலோச்ச துவங்கிவிட்ட நிலையில், பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக நினைப்பது பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களைத்தான். சமூகத்தில் எவ்வளவு பெரிய பதவியில், அந்தஸ்தில் இருந்தாலும் அப்பெண்ணுக்கு எதாவது ஒரு வகையில் பாலியல் தொடர்பான பிரச்னை ஏற்படுகிறது என்பதை மறுக்கமுடியாது. வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு பெண்ணும் மோசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலையில் தான் சமுதாயம் உள்ளது. குடும்ப பொருளாதார சூழ்நிலைக்காக பணிக்கு செல்லும் பெண்கள்  அது அரசுத்துறை, தனியார் துறை,  சினிமா, அரசியல் என்று எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை  சந்திக்கின்றனர்,.

இது போன்ற சூழ்நிலைகளில் அனைத்து பெண்களும் தங்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை எதி்ர்த்து போராட முன்வருவதில்லை. ஆனால், தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்த சில பெண்கள்  இந்த கொடுமையை எதிர்த்து சட்டப்போராட்டத்தை தர்மயுத்தமாகவே நடத்துகின்றனர். சினிமா துறையில் ‘மீ டூ’ மூலம் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பெண் பிரபலங்கள் பகிரங்கப்படுத்துகின்றனர்.   பணி செய்யும் இடத்தில் பெண்களிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அரசு மற்றும் தனியார் துறைகளில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ‘பணி செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை  சட்டம் 2013’ ஐபிசி (509) பிரிவு வகுத்து  உத்தரவிட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்கள் பாதுகாப்புக்காக  விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இக்குழு வெறும் ‘டம்மியாக’ இருக்கிறது என்பது வேறு விவகாரம்.

 தமிழகத்தில்  அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொல்லை இருக்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தாலும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையில் நடக்கும் அத்துமீறல்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. போலீஸ் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள்  வரை  பாலியல் குற்றச்சாட்டில்  சிக்குவது வழக்கமாகிவிட்டது. காவல்துறை உயரதிகாரிகள் மீது அவர்களுக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகள்  பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கும் போது அரசு அதை அலட்சியமாக எடுத்துக்கொள்வதுடன் சம்பந்தப்பட்ட ஆண் அதிகாரியை பாதுகாக்கும் கேடயமாகவும் மறைமுகமாக செயல்படுகிறது.  லஞ்ச ஒழிப்பு துறையில் ஐ.ஜியாக பணியாற்றிய முருகன், தனக்கு கீழ் பணியாற்றிய  பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்நிலையில் ஒரு பெண் எஸ்.பி. தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தைரியமாக புகார் அளித்தார். இந்த விவகாரம் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் பூதாகரமான பிறகு விசாரணை நடத்த தமிழக அரசு  விசாகா கமிஷனை அமைத்தது. இந்த குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், சு.அருணாசலம், டிஐஜி தேன்மொழி உள்பட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும் இடம்பெற்றனர். ஐஜிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த அவர்கள் அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைத்தனர். சிபிசிஐடி விசாரணைக்கு தடை கோரி ஐ.ஜி முருகன் உயர்நீதிமன்றத்தை நாடினார்.  

 பின்னர் பெண் அதிகாரி தமிழக காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் முறையிட்டு மேற்கொண்ட  தொடர் சட்டப்போராட்டத்துக்கு பிறகு,  தெலங்கானா மாநிலத்துக்கு  விசாரணையை மாற்றிய நீதிமன்றம், அம்மாநில டிஜிபி  இப்புகாரை  விசாரணை நடத்தி ஆறு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்த ஐ.ஜி முருகன், தன் மீதான விசாரணைக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்துவிட்டது. இருந்தாலும், பெண் எஸ்பியின் சட்டரீதியான போராட்டம் தொடர்கிறது. அவரும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பணியிடமாற்றம் பெற்று பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.  சிவகங்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில்  ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிபிசிஐடி விசாரணையில் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு 10 பேரை மட்டுமே கைது செய்து வழக்கின் போக்கையே மாற்றியது துரதிஷ்டவசமானது..

 பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை இளைஞர்கள் சீரழித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்களின் வாரிசுகளும் சம்பந்தப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில் வழக்கை நீர்த்து போக செய்யும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.   அதிமுக ஆட்சியில் அமைச்சரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். மாண்புமிகு ஒருவர், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமாதானம் செய்யும் ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ஆட்சி அதிகாரம், பண பலம், செல்வாக்கை கொண்டு அதை அவர் அப்படியே அமுக்கிவிட்டார். இதே போன்று தமிழக ஆளுநர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்காக பேராசிரியை ஒருவர் மாணவிகளிடம் பேசிய ஆடியோ விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இறுதியில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணையில், பேராசிரியை சிக்கி பல்வேறு அவமானங்களை சந்தித்து சிறைக்கு சென்று தற்போது மவுனியாக மாறிவிட்டதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பியை பணி நிமித்தமாக பேச வேண்டும் என்று காருக்குள் அழைத்து கண்ணியக்குறைவாக நடந்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் எஸ்பியை சமாதானப்படுத்த தனது ஆதரவு அதிகாரிகளை ராஜேஷ்தாஸ் பயன்படுத்தியுள்ளார். எதற்கும் அஞ்சாத பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தனது புகாரில் உறுதியாக உள்ளார். தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்காக திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஜெய ரகுநந்தன், ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகளிடம் அத்துமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு விசாகா குழு விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியிடமாற்றம் தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு துறையில் பணியாற்றி கொண்டே அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளும் முயற்சிகளை தொடங்கிவிடுகின்றனர். எனவே குற்றச்சாட்டு உறுதியானதுமே சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது பெண் காவல் அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.   பாலியல் குற்றச்சாட்டை சந்திக்கும் அதிகாரிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள் வழக்கை வேண்டுமென்றே நீட்டித்து, திசை திருப்பி சட்ட ஓட்டைகளில் பதுங்கி விடும் நிலை தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. எனவே, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் கறை படிந்த காவல்துறையின் கவுரவமும் காப்பாற்றப்படும். காவல்துறையில் பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் சாதாரண பெண்கள் தங்கள் பிரச்னைக்காக காவல்துறையை அணுக அச்சப்படுவார்கள். மக்களுக்கு காவல்துறைமீதான நம்பிக்கை போய்விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஐபிஎஸ் அதிகாரிகள்  சங்கம் ஆதரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் கூறியிருப்பதாவது: பெண் ஐபிஎஸ் அதிகாரி மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது அளித்துள்ள பாலியல் புகாரை ஐபிஎஸ் சங்கம் அக்கறையுடன் பார்க்கிறது. இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு எதிராக அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இப்புகார் மீது சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்தி விரைந்து வழக்கை முடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான புகார்கள் குறித்து தேசிய ஆணையத்தில் பதிவான வழக்குகள்:

ஆண்டு    நாடு முழுவதும்    (தமிழகத்தில்)

2016    539    38

2017    570    17

2018    965    34

2019 (ஜனவரி மாதம் மட்டும்)    29    1

ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் கோலோச்ச துவங்கிவிட்ட நிலையில், பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக நினைப்பது பணி செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்களைத்தான்.

ஐபிஎஸ் அதிகாரிகள்  சங்கம் ஆதரவு

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் கூறியிருப்பதாவது: பெண் ஐபிஎஸ் அதிகாரி மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது அளித்துள்ள பாலியல் புகாரை ஐபிஎஸ் சங்கம் அக்கறையுடன் பார்க்கிறது. இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு எதிராக அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இப்புகார் மீது சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்தி விரைந்து வழக்கை முடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>