மும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை

மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காரை மர்ம ஆசாமி ஒருவர் நிறுத்திச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், அந்த கார் திருட்டு கார் என்பதும் தெரிய வந்துள்ளது.  மும்பை கும்பாலா ஹில், அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தலைவரும், நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இல்லம் உள்ளது. ஆண்டிலியா ஹவுஸ் என்ற இந்த இல்லத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில், கார்மிக்கேல் சாலையில், நேற்று முன்தினம் காலையில் இருந்து பச்சை நிற ஸ்கார்ப்பியோ கார் ஒன்று கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், வாகனம் எங்கிருந்து வந்தது என ஆய்வு செய்தனர்.

வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தியவர், முகமூடியும், ஜெர்கின் போன்ற உடையும் அணிந்திருந்தார். வாகனத்தில் பல போலி நம்பர் பிளேட்டுகள் இருந்தன. கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், அம்பானி குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், விசாரணை துவக்க நிலையில் உள்ளதால், கடித விவரத்தை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து, அம்பானி வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, தானே பகுதியை சேர்ந்த ஹிரன் மான்சுக் என்பவர், ஜெலட்டின் குச்சிகளுடன் இருந்த கார், ஒரு வாரம் முன்பு திருடு போன தனது காரை போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காம்தேவி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரிலையன்ஸ் இன்டஸ்ட்டிரீஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உடனடியாக விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: