×

காவிரி கூடுதல் நீரை தமிழகத்துக்கு தர மாட்டோம்: கர்நாடகா உள்துறை அமைச்சர் உறுதி

பெங்களூரு: காவிரி கூடுதல் நீரை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தி தரமாட்டோம் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடகா நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் கூறியதாவது: காவிரி நதியில் தடுப்பணை அமைத்து குடிநீர் திட்டம் அமல்படுத்த அனுமதி கேட்டு வருகிறோம். பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரம் காவிரியில் இருந்து செல்லும் கூடுதல் 45 டிஎம்சி நீரை தமிழகம் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளது.

தமிழக அரசின் புதிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தவறாகும். தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டம், மாநிலங்கள் இடையிலான நீர் பங்கீட்டு ஆணையத்திற்கு எதிரானதாகும். அண்டை மாநிலமான நமக்கு சிறிய தகவல் கூட அளிக்காமல் தமிழக அரசு காவிரி கூடுதல் நீரை பயன்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பது மிகவும் தவறாகும்.  இதை எதிர்த்து உச் சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். காவிரி, வைகை, வெள்ளாறு, குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலமாக 45 டிஎம்சி கூடுதல் நீரை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டம் வகுத்துள்ளது. இத்திட்டத்தினால் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Karnataka Home Minister , Cauvery will not give extra water to Tamil Nadu: Karnataka Home Minister assures
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...