கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி

சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு பின்புறம் உள்ள ராணுவ குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், அதை சுத்தம் செய்ய அன்னை சத்யா நகர் பி- பிளாக் பகுதியை சேர்ந்த ராஜா (30), சந்தோஷ் (40) ஆகிய இருவரை நேற்று அழைத்து வந்து, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர்.  ராஜா, சந்தோஷ் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி இருவரும் மயங்கினர். இதுபற்றி கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அப்போது, அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த கோட்டை போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்த விஜயகாந்த் - ஜெபசெல்வி தம்பதியின் குழந்தை சாய்சரண் (3), நேற்று மதியம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. அக்கம் பக்கத்தில் தேடியபோது, அங்குள்ள திறந்தநிலை கழிவுநீர் தொட்டியில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, சாய்சரண் கழிவுநீரில் தத்தளித்தது தெரிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories:

>