பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு

சேலம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கக்கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 26ம் தேதி (நேற்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் பங்கேற்றன. போராட்டம் காரணமாக 6 மாநில லாரி உரிமையாளர்களுக்கு ₹1000 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தண்ணீர், மருந்து, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான லாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிற லோடு ஏற்றப்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சேலம் மாவட்டத்தை பொருத்தமட்டில், 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. இந்த போராட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திட்டமிட்டபடி மார்ச் 15ம் தேதி காலவரையற்ற ஸ்டிரைக் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>