ஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

மேட்டூர்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, அந்த நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச்சென்று நிரப்பும் திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரி மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நேற்று காலை, மேட்டூர் திப்பம்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: இந்த திட்டத்தை பெரிய சவாலாக எடுத்து செய்து முடித்திருக்கிறோம். இதற்காக பொதுமக்கள் தானாக முன்வந்து நிலங்களை அர்ப்பணித்துள்ளனர்.

அவர்களுக்கு நன்றி. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும், விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வறட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2,747 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை திட்டத்திற்கு தேசிய விருது பெற்று இருக்கிறோம். இந்த அரசு வேளாண் மக்களை காக்கும் அரசு. வேளாண் தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு. இவ்வாறு அவர் பேசினார். மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், திப்பம்பட்டியில் தொடங்கி வைக்கப்பட்டதும் காவிரி நீர் எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பார்வையிட்டு, ஏரியில் மலர் தூவி வணங்கினார்.

Related Stories:

>