விஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்

இந்தூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், தமிழக அணி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை நேற்று வீழ்த்தியது. எலைட் - பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனினும், அடுத்த நடந்த ஆட்டங்களில் ஆந்திராவிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், மத்தியப் பிரதேசத்திடம் 14 ரன் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது. இதனால் கடும் பின்னடைவை சந்தித்த தமிழக அணி 4வது லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியுடன் நேற்று மோதியது. டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட் செய்தது. அபராஜித் - ஜெகதீசன் இணை முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ஜெகதீசன் 30 ரன்னில் வெளியேற, வழக்கத்திற்கு மாறாக முன் வரிசையில் களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன், ரஞ்சன் பால் 10 ரன், இந்திரஜித் 2 ரன்னில் ஆட்டமிழக்க தமிழகம் 25 ஓவரில் 86 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், பொறுப்புடன் விளையாடிய அபராஜித் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன் (105 பந்து, 6 பவுண்டரி) எடுத்து நதீம் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 6வது விக்கெட்டுக்கு ஷாருக்கான் - கவுசிக் இணைந்து 50 ரன் சேர்த்தனர். ஷாருக் 51 ரன் (47 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கவுசிக் 55 ரன் (40 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் கிஷோர் - முகமது ஜோடி அதிரடியில் இறங்க, தமிழகம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. கிஷோர் 29 ரன் (20பந்து, 3சிக்சர்), முகமது 20 ரன்னுடன் (9பந்து , 3 சிக்சர்).இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜார்கண்ட் அணி, முதல் பந்திலேயே கேப்டன் இஷான் கிஷண் டக் அவுட்டாக அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.  இவர் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 173 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த உத்கர்ஷ் சிங் 5, தியோப்ரத் 8 ரன்னில் வெளியேறினர். இந்த நிலையில் விராத் சிங் - சுமித் குமார் ஜோடி பொறுப்பாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது. விராத் சிங் 49 ரன் (63 பந்து, 6 பவுண்டரி), சுமித்குமார் 40 ரன் (66 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, ஆட்டம் தமிழக அணி கட்டுப்பாட்டில் வந்தது.

அனுகுல் 16, நதீம் 0, ராஜன்தீப் 5, பால் கிரிஷ்ணா 12 ரன்னில் அணிவகுக்க, ஜார்கண்ட் 42.5 ஓவரில் 9 விக்கெட் இழந்து 145 ரன் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு வருண் ஆரோன் - ராகுல் சுக்லா ஜோடி அதிரடியில் இறங்கி தமிழக பந்துவீச்சை பதம் பார்த்ததால் ‘ஆல் அவுட்’டில் இருந்து தப்பித்த ஜார்கண்ட் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து 67 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆரோன் 18 ரன், சுக்லா 42 ரன்னுடன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழ்நாடு தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை விதர்பா அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: