நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதத்திலேயே 66 சதவீதத்தை தாண்டியது நிதிப்பற்றாக்குறை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களிலேயே, பட்ஜெட் மறு மதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிதிப்பற்றாக்குறையில் 66 சதவீதத்தை தாண்டி விட்டது.  வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசம், நிதி பற்றாக்குறை எனப்படுகிறது. மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை கடன் வாங்குவது மூலம் சரி செய்கிறது.   நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, நிதிப்பற்றாக்கறை ₹8 லட்சம் கோடியாக இருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியி–்ல் 3 சதவீதம். இருப்பினும், கொரோனா பரவல் ஊரடங்கால் இந்த பற்றாக்குறை இலக்கு திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் ₹18.4 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதம். மத்திய அரசின் கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை ₹12.34 லட்சம் கோடியை தாண்டி விட்டது. அதாவது, திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் இது 66.8 சதவீதம்.

Related Stories: