ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பிரசாதங்கள் பிளாஸ்டிக் பைகளில் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பைகளை நிறுத்தி, துணிப் பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை, தற்போது சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன. தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம் பச்சை நிறத்தில் இந்த பையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைகள் ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ என்று அழைக்கப்படுகிறது. சோதனை முறையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த பைகள் விரைவில் பக்தர்களின் வரவேற்பை பொருத்து முழு அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு  பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: