பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: இந்தியாவில் 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு இறுதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், நடைபெற இருக்கும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்ட மக்களை ஜாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் எனக் கோரி தெலங்கானாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மல்லேஷ் யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `கடந்த 1979-80ல் மண்டல் ஆணையம் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, நாட்டில் 3,743 பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இருந்தனர்.  தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் ஆய்வுப்படி, கடந்த 2006ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஜாதி எண்ணிக்கை 5,013 ஆக உயர்ந்துள்ளது.

ஜாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாததால், கல்வி, வேலைவாய்ப்பு, பஞ்சாயத்துத் தேர்தல், நகராட்சித் தேர்தல்களில் ஜாதி வாரியான இடஒதுக்கீடுகளை செயல்படுத்துவதில் அரசுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் சதவீத அடிப்படையில் தீர்மானிப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது,’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு  பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Related Stories:

>