மகாராஷ்டிரா காட்டில் உயிருடன் எரிப்பு: கோவை கடற்படை அதிகாரி துபே விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம்: கடன் தொல்லையால் கடத்தல், தீவைப்பு நாடகமா?

பங்கு சந்தை காரணமா?

கோவை கடற்படை அதிகாரி துபேவுக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல் கடன் இருந்துள்ளது. அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இதில், ரூ.18 லட்சத்துக்கு மேல் இழந்துள்ளார். இதனால், அவருடைய கடன் சுமை அதிகமாகி இருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக 13க்கும் மேற்பட்ட வங்கிகளை அணுகி கடன் கேட்டுள்ளார். எதுவுமே அவருக்கு பயன் அளிக்கவில்லை. இறுதியாக, தனது குடும்பத்திடம் பணம் வாங்குவதற்காக கடத்தல் நாடகமாடியதாக கருதப்படுகிறது.

மும்பை: கோவை கடற்படை இளம் அதிகாரி சுரஜ் குமார் துபே, தனக்கு ஏற்பட்ட ரூ.25 லட்சம் கடனை அடைப்பதற்காக கடத்தல் நாடகமாடி, தீக்குளித்ததாக விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது. கோவையில் உள்ள கடற்படை பிரிவில் இளம் அதிகாரியாக பணியாற்றியவர் சுரஜ் குமார் துபே (27). ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்தவர். இம்மாதம் 5ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் இவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். பின்னர், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘சென்னை விமான நிலையம் அருகில் இருந்து என்னை ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தி, இங்கு கொண்டு வந்தது. என்னை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டது. அதை கொடுக்காததால் கோபம் ஏற்பட்டு, என்னை தீ வைத்து எரித்தனர்,’ என்று கூறினார். கடற்படை அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டதால், தேசிய அளவில் இப்பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இது மகாராஷ்டிரா, தமிழகம்,  ஜார்கண்ட் என மூன்று மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் மாறியது. மேலும், கடற்படை அதிகாரி என்பதால் அப்படையின் உளவுப் பிரிவும், மத்திய அரசின் உளவுப் பிரிவுகளும் களத்தில் இறங்கி தீவிர விசாரணை நடத்தின. மேலும், பால்கர் மாவட்ட போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இது கடத்தல் விவகாரம் அல்ல என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது மரணத்துக்கு முன்பாக, துபே அளித்த வாக்குமூலம் பல்வேறு முரண்பாடுகளை கொண்டதாக இருந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களையும், அவற்றையும் ஒப்பிட்டு பார்த்த போது, அவர் கடத்தல் நாடகமாடி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பால்கர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தத்தாரே ஷிண்டே கூறுகையில், ‘‘சென்னையில் ஜனவரி 30ம் தேதி தான் கடத்தப்பட்டதாக துபே கூறினார். ஆனால், அதன் பிறகும் அவர் அங்குதான் இருந்துள்ளார். அங்குள்ள ஏடிஎம்.மில் பணம் எடுத்துள்ளார். சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று, அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி அந்த ஒட்டல் அறையை காலி செய்துள்ளார்.

சென்னையில் இருந்து பால்கருக்கு காரில் வருவதற்கு குறைந்தப்பட்சம் 26 மணி நேரமாகும். ஆனால், அவர் எப்படி ஒரு சில மணி நேரத்தில் இங்கு வந்தார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. அது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘இம்மாதம் 5ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, இங்குள்ள தலசேரில் உள்ள பெட்ரோல் பங்கில் துபே 5 லிட்டர் டீசலை கேனில் வாங்கி சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் இக்காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. மேலும், கடத்தல்காரர் இர்பான் என்ற பெயரில் இவரே குடும்பத்தினரிடம் பேசி பணம் கேட்டுள்ளார். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது, தனது குடும்பத்தினரிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக அவரே தான் கடத்தப்பட்டதாக  நாடகமாடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடும்பத்தினரிடம் போலீசாரிடம் தகவல் தெரிவித்ததும், தான் சிக்கி விடுவோமா என்ற அச்சத்தில் தீக்குளித்து இருக்கலாம். இருப்பினும், எந்தவிதமான இறுதி முடிவுக்கும் நாங்கள் வரவில்லை,’’ என்றார்.

Related Stories:

>