இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழக அரசியலில் தனி முத்திரை பதித்தவர் தா.பாண்டியன்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கி.வீரமணி (தி.க. தலைவர்):  தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம் முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ராமதாஸ் (பாமக நிறுவனர்):  இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லகண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர் தா.பாண்டியன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தா.பாண்டியன்  மறைவு,  பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடு செய்ய முடியாத இழப்பு. கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பொதுவாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், இந்திய அரசியலில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும், உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் போராடிய சிறந்த போராளியாக திகழ்ந்தவர்.  

இதுபோல் திருநாவுக்கரசர் எம்.பி (முன்னாள் காங்கிரஸ் தலைவர்), விஜயகாந்த் (தேமுதிக தலைவர்), திருமாவளவன் (தலைவர், விசிக), ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்), எல்.முருகன் (தமிழக பாஜ தலைவர்), டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்), சரத்குமார் (சமக தலைவர்) உள்ளிட்டோரும் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>