×

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ராகுல்காந்தி நாளை (27ம் தேதி) தேர்தல் பிரசாரம் துவக்குகிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் தென் மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம்  சூடுபிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்நிலையில், 3வது கட்ட தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தென் மாவட்டங்களில் நாளை (27ம் தேதி) துவங்குகிறார்.

 இதற்காக விமானம் மூலம் நாளை (27ம் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர், வஉசி கல்லூரியில் வக்கீல்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே ‘ரோடு ஷோ’ நடத்தி  பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் ராகுல்காந்தி மக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் சாத்தான்குளம், இட்டமொழி வழியாக மன்னார்புரம் விலக்கு சென்று பேசுகிறார். அங்கிருந்து பரப்பாடி வழியாக நெல்லை மாவட்டம் வருகிறார். நாங்குநேரி  டோல்கேட் அருகே காங்கிரஸ் மாநில பொருளாளர் நாங்குநேரி ரூபி மனோகரன் ஏற்பாடு செய்துள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில்  தங்குகிறார்.

நாளை மறுதினம் (28ம் தேதி) காலை 9 மணிக்கு பாளை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், அறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லையப்பர் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் அவர், பின்னர் திறந்த வேனில்  ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். டவுன் காந்தி சிலை முன் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம் மற்றும் சுரண்டை பகுதிகளுக்கு சென்று பீடி தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார். பின்னர் மார்ச் 1ம் தேதி குற்றாலத்தில் இருந்து நாகர்கோவில்  செல்லும் வழியில் கடையத்தில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்று பிரசாரம் செய்கிறார். ராகுல்காந்தியின் மூன்று நாட்கள் தென் மாவட்ட  வருகையால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Tags : Padulla , Tamil Nadu election field heats up: Nellai, Rahul Gandhi campaign tomorrow in Thoothukudi: ‘Road show’ in major cities
× RELATED தமிழகத்தில் நாளை முதல் மீண்டும்...