தார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் தார்ச்சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் இன்றுவரை மண் சாலைதான் உள்ளது. குறிப்பாக, திருத்தணி அருகே கிருஷ்ணாசமுத்திரம் காலனிக்கு பல வருடங்களாக மண் சாலைதான் உள்ளது. இதன்வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.

மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றவேண்டும் என்று கிராம மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.இதுபற்றி மக்கள் கூறுகையில், ‘’ கிருஷ்ணசமுத்திரம் காலனிக்கு செல்லும் மண் சாலையை பயன்படுத்த முடியவில்லை. மழைக்காலத்தின்போது சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் நடந்துகூட செல்வதற்கு சிரமப்படுகிறோம். வாடகை வண்டிகள் ஊருக்குள் வருவது கிடையாது. எனவே, தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். இல்லாவிட்டால் மறியல் உள்பட பலகட்ட போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

Related Stories: