‘தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்....’ காத்திருக்கும் மீனவர்கள்: மிரட்சியில் பாஜ, அதிமுக

ராமேஸ்வரம்: ‘‘பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்து விட்டோம். எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் நசிந்து வருகிறது. மீனவர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி  வருகின்றனர். இந்த அவல நிலைக்கு தற்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று மீனவர்கள் கொதிப்புடன் காத்திருக்கின்றனர். இதனால் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் பாஜ  முக்கியப் புள்ளிகள் மிரட்சியில் உள்ளனர்.

 தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை 13 கடலோர மாவட்டங்களில் 561 மீன்பிடி கிராமங்கள்  உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் மீனவர் குடும்பங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேர் உள்ளனர். மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், கீழக்கரை, பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி ஆகிய கடற்கரைகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். தவிர 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நாட்டுப்படகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றன. மீன்பிடித் தொழில் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் வாரம் 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. தவிர இறால் மீன் ஏற்றுமதியிலும் கணிசமான லாபம் கிடைக்கிறது.

புயல், சூறாவளி, கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு, மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். ஆனால் ‘இயற்கை பேரிடர்களை கூட சமாளித்து விடுவோம். இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான  தாக்குதல்கள், துப்பாக்கி சூடு ஆகியவற்றை எதிர்கொண்டு, தினமும் செத்துப் பிழைக்கிறோம் என்று ராமநாதபுரம், மாவட்ட மீனவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களும் அடிக்கடி  இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கூறியதாவது: மீனவர்கள் கடலுக்கு செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடி உரிமை என்றால் என்ன அர்த்தம் என்றே மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை. கச்சத்தீவு  பகுதியில் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்று மத்தியில் ஆளும் பாஜ அரசும் மிரட்டுகிறது. கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளது. அதை தாரை வார்த்து விட்டால், மீன்பிடிக்க கடலுக்கு  செல்வதில் அர்த்தமே இல்லை.

 

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை மத்தியில் ஆளும் பாஜ அரசும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மாதம் புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த  மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் கட்டி வைத்து கொடூரமாக அடித்தே கொலை செய்தனர். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்னையில் பாராமுகமாக உள்ளன. மாவட்டத்தில் மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த 2.5 லட்சம் பேர் உள்ளனர். அதிமுக, பாஜ கட்சியினர் எங்களிடம் ஓட்டு கேட்டு வரட்டும். இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்.

பல மீனவ கிராமங்களில் இந்த 2 கட்சியினரையும்  உள்ளேயே விட மாட்டார்கள் என்று கொந்தளிப்புடன் தெரிவித்தனர். மீனவர்களின் இந்த கொந்தளிப்பால் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் பாஜ கட்சிகளின் முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். மீனவர்களின் வாக்குகள் கண்டிப்பாக நமது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று தலைமையிடத்திற்கு  தகவல் கொடுத்து விட்டு, தலையில் கை வைத்து அமர்ந்திருக்கின்றனர்.  

Related Stories:

>