அதிகம் சீட், அதிக பணம் கேட்டு குடைச்சல்: அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி: பதட்டத்தில் பாஜக, பாமக, தேமுதிக தலைவர்கள்

சென்னை: அதிக சீட், அதிக பணம் கேட்டு முக்கிய கட்சிகள் குடைச்சல் கொடுப்பதால், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக, பாமக, தேமுதிக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் தலைவர்கள் பதட்டமடைந்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் இதே கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்துள்ளன.

ஆனால் அதிமுக கூட்டணியின் தலைமை வீக்காக இருப்பதால், அதிக சீட் மற்றும் தேர்தல் செலவுக்கு அதிக பணம் கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டன. அதிமுகவைப் பொறுத்தவரை 130க்கும் மேற்பட்ட சீட்டுகளில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 100 சீட் வரை ஒதுக்கவும் தயாராக உள்ளது. அப்படி ஒதுக்கினால்தான் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க முடியும் என்று அதிமுக தலைமை கருதுகிறது.

ஆனால் அதிமுக தலைமை வீக்காக இருப்பதால் இப்போது அவர்களை மிரட்டினால்தான் உண்டு என்று கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன. அதோடு, இந்த தேர்தலில் கடும் எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்ய அதிமுகவும் தயாராக உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பல அமைச்சர்கள் சிறை செல்ல நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதில் ஆளும் கட்சியினர் கூட, இதுவரை அமைச்சர்கள் சம்பாதித்த பணத்தை தங்களுக்கு கொடுக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் அவர்கள் தோற்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் இப்போதே குழிபறிப்பு வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.

 இவ்வாறு அதிமுகவுக்கு எதிராக அடுக்கடுக்கான பிரச்னைகள் இருப்பதால் அவர்களை மிரட்டினால் வழிக்கு வருவார்கள் என்றுதான் பல கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கருதுகின்றனர். இதனால், பாஜக இந்த முறை வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்றால் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கருதுகின்றனர். இதனால் 60 தொகுதிகள் வரை வேண்டும் என்று கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டனர். இருமுறை அமித்ஷா இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம் பேசியுள்ளார். அப்போது 60 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி கூட குறைக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டார். நாங்கள் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகளுக்கு சீட் வழங்கிவிடுகிறோம் என்கிறார். அதோடு 60 தொகுதிகளுக்கான செலவுகளை அதிமுக ஏற்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் பாமகவும் 40 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி குறைந்தாலும் வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் மறைமுகமாக 40 சீட் அதற்கான செலவுக்கு பணத்தை தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு கொடுத்த பணத்தை தலைமையே வைத்துக் கொண்டது. வேட்பாளர்கள் சொந்த பணத்தை போட்டு செலவு செய்தனர். இதனால் படுதோல்வியை பாமக சந்தித்தது. இந்த முறை வாழ்வா, சாவா பிரச்னை. அதிலும் பணத்தை தலைமை வைத்துக் கொண்டால், வேட்பாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டியது வரும். இதனால் தோற்பது உறுதியாகிவிடும் என்று அதிமுக தலைவர்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் வேட்பாளர்களின் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிமுக தலைமை கூறுகிறது. இதற்கு பாமக மறுத்து விட்டது. செலவு பணத்தை தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதனால், இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் உள்ளது. இந்தநிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து அதிமுகவை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறார். இந்தக் காரணத்தைக் கூறி பாஜக, பாமகவிடம் பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை தள்ளி வைத்துள்ளது. இப்போது ஓரளவு சசிகலா பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால், பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதிகளை முடிவு செய்ய வேண்டும் என்று இரு கட்சிகளும் கூறி வருகின்றன.

அதேநேரத்தில் பாமகவை அதிகமாக தூக்கி வைத்து கொண்டாடுவது தேமுதிகவுக்கு பிடிக்கவில்லை. கடந்த 2 தேர்தலில் தேமுதிக படுதோல்விக்கு பாமகதான் காரணம் என்று தேமுதிக தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வேண்டும். அதிக தொகுதிகளை தரவேண்டும். தேர்தல் செலவுக்கான பணத்தை உடனடியாக தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இரு கட்சிகளிடம் பேசி முடித்த பிறகுதான் தேமுதிகவிடம் பேச முடியும்.

முடிந்தால் கூட்டணியில் இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஸ்டம் என்று அதிமுக தலைமை கை விரித்து விட்டது. இதனால் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாத நிலையில் என்ன செய்வது என்று கையை பிசைத்தபடி உள்ளது தேமுதிக. இதே நிலைமைதான் புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் உள்ளது. இதனால் அவர்களும் தங்களால் முடிந்தவரை அதிமுக தலைமைக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அதிக சீட் அதன் மூலம் கிடைக்கும் பெரிய அளவிலான பணம் ஆகியவற்றை குறி வைத்தே பேச்சுவார்த்தைகளை நடத்துவதால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையை கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். இது பாஜக, பாமக, தேமுதிக தலைவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் 2ம் கட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>