×

சிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், வைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தற்போதைய தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் தயாராகி வருகிறார்.இவர், கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள நான்கு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார்.

வெற்றி பெற்ற 2001, 2011, 2016ம் ஆண்டுகளில் எஸ்.பி.சண்முகநாதன் ஜவுளித்துறை, கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஓபிஎஸ் தலைமையில் இணைந்து செயல்பட்ட சண்முகநாதன் எம்எல்ஏ பின்னர், அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைந்த பிறகு முதல்வர் இபிஎஸ் நம்பிக்கையை பெற்று செயல்பட்டு வருகிறார். ஆகையால், இந்த முறை இவருக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று கட்சியினர் கருதுகின்றனர்.

இதேநேரத்தில், சாத்தான்குளம் முன்னாள் யூனியன் சேர்மன் ஏ.எம்.ஆனந்தராஜா இந்த தொகுதியை பெறவேண்டுமென சென்னையிலுள்ள தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளை சந்தித்து காய் நகர்த்தி வருகிறார். இதுதவிர முதலூர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் பொன்முருகேசன் தனக்கு அல்லது தனது மனைவிக்கு சீட் பெற்றிடவேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார்.

 மேலும், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதியின் கணவரும், மாவட்ட ஜெ.பேரவை துணை தலைவருமான ராஜேந்திரன், கருங்குளம் யூனியன் துணை சேர்மனும், கருங்குளம் ஒன்றிய செயலாளருமான செக்காரக்குடி லெட்சுமணப்பெருமாள், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய செயலாளருமான அழகேசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை சேர்மன் விஜயன் உள்ளிட்டோரும் அதிமுகவில் சீட் பெறுவதற்கு முட்டி மோதி வருகின்றனர். யாருக்கு வைகுண்டம் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Srivaikundam ,MLA , Will sitting MLA get Srivaikuntam back?
× RELATED அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெண்...