கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!

சென்னை: தமிழக, புதுச்சேரி ,கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4.30 மணியளவில் அறிவிக்கவுள்ளது. இதற்கிடையே, சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனையும் தள்ளுபடி செய்துள்ளோம் என்றார். பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75% விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. பிரச்னைகள் என வரும்போது மக்கள்தான் முக்கியம். தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடன் வாங்காத மாநிலம் இல்லை. இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் மக்களுக்கு உதவி செய்கின்றன.

வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் வாங்கப்படுகிறது. அரசின் அறிவிப்புகளுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இ-டெண்டரில் எப்படி முறைகேடு செய்ய முடியும்? எங்கிருந்து வேண்டுமானாலும் இ-டெண்டர் எடுக்கலாம்.

பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். இயற்கைச் சீற்றங்கள், கொரோனா பாதிப்பு ஆகிய சோதனைகளிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா காலத்தில் ரூ.1000 நிதியுதவி, பொங்கலுக்கு ரூ.2,500 நிதியுதவி அளித்தோம். ஐபிஎஸ் அதிகார் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: