குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை : மு.க.ஸ்டாலின் விளாசல்

விழுப்புரம் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், தீவனூர் - நான்கு முனை கூட்டு சாலை அருகில் நடைபெற்ற, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் அவர்களது மறைவிற்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:கிருஷ்ணமூர்த்தி என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:காகித உற்பத்தியை நம்பி இருக்கும் இந்த மாவட்ட மக்களுக்கு, இந்த பகுதியில் ஒரு காகித ஆலை அமைக்கப்பட வேண்டும் என்று மயிலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதை சட்டமன்றத்திலும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி அவர்கள் பேசியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்து விட்டது. எனவே நம்முடைய ஆட்சியில் விரைவில் அமையும்போது அதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உறுதியை மயிலம் தொகுதி - கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஜெனிதா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணவசதி இல்லாத காரணத்தினால், கல்லூரி சேர்க்கையிலும் தன்னுடைய மகனுக்கு பிரச்சினை இருப்பதாக இங்கே சகோதரி ஜெனிதா அவர்கள் சொல்லியிருக்கிறார். நீட்டை ஒழிப்பது, அதுவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, மருத்துவ இடம் கிடைத்தவர்களுக்கு நிதி உதவி வழங்குவது, இவை அனைத்தையும் தி.மு.க. தான் முன்னின்று செய்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியுமோ, அந்த விதத்தில் நம்முடைய கழகம் நிச்சயமாக உதவி செய்யும். அதை நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் மஸ்தான் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கவலைப்படாதீர்கள். அவர் உங்களை தொடர்பு கொண்டு எவ்வாறு உதவி செய்ய முடியுமோ, அந்த உதவிகளை நிச்சயமாக செய்து வைப்பார். கவலைப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்.

சதீஷ் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

மயிலம் சதீஷ் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது மயிலத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு கலைக் கல்லூரி ஒன்று இந்த பகுதியில் அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். தன்னுடைய மனுவிலும் அதை குறிப்பிட்டிருக்கிறார். புகழ்ப்பெற்ற மயிலம் தமிழ் கல்லூரி இருக்கும் இந்த பகுதியில் அரசு கல்லூரியும் இடம்பெற வேண்டுமென்று என்பதுதான் அவருடைய கோரிக்கை. அது பாராட்டுக்குரியது. அதுமட்டுமில்லாமல் படித்துவிட்டு அதிகம் பேர் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நிலை இருப்பதையும் தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயமாக சொல்கிறேன், இதற்கு உரிய தீர்வு காணப்படும். கழக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் - கல்வி, வேலைவாய்ப்பில் நிச்சயமாக முன்னேற்றம் அடையும். அதற்கான முயற்சியில் நம்முடைய ஆட்சி ஈடுபடும் என்பதை சகோதரர் சதீஷ் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாக்கியம் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

பாக்கியம் அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றி சொன்னார்கள். இந்த பிரச்சினை இங்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருக்கிறது. அதில் பல முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 100 நாள் என்று சொல்லி 35 நாட்கள் மட்டும் வேலை கிடைக்கிறது என்று சகோதரி பாக்கியம் அவர்கள் மனுவில் குறையாகச் சொல்லி இருக்கிறார். அதை பற்றி ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களிடம் சொல்லி, இதற்கு முடிந்தவரை தீர்த்து வைத்து இருக்கிறோம் என்று சொன்னார். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, மத்தியில் நம்முடைய ஆட்சி வந்தால், அந்த 100 நாள் வேலைத்திட்டத்தை இன்னும் அதிகப்படுத்தி கொடுக்கலாம். அந்த ஊதியத்தை இன்றைக்கு வங்கி மூலமாக அவரவர் வங்கி கணக்கில் போடுகிறார்கள். அது முறையாக வந்து சேர்கிறதா என்று பார்த்தால், அதுவும் சேரவில்லை. நினைத்த நேரத்தில் வங்கிக்கு சென்று எடுக்க முடியவில்லை. அதனால் அந்த 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நேரடியாக அன்றைக்கே சம்பளத்தை கொடுக்கும் வகையில் நிச்சயமாக தி.மு.க. ஆட்சியில் அந்த பணியை செய்து முடிப்போம். இந்த 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்ற காரணத்தினால் மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு, 100 நாட்களை இன்னும் உயர்த்தி கொடுக்கலாமா? 150 நாட்களாக கொடுக்கலாமா? என்று யோசனை செய்து கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு சொல்லப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மணிகண்டன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

மயிலம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் அவர்கள் பேசியதை கேட்டீர்கள். அவரே சொன்னார், ஏற்கனவே அவர்களை எவ்வாறு அழைத்துக் கொண்டு இருந்தோம் என்றால் ‘உடல் ஊனமுற்றவர்கள்’ என்று அழைத்துக் கொண்டு இருந்தோம். அதில் ஊனம் என்ற வார்த்தை அவர்களை மனதை ஊனப்படுத்துவதாக இருக்கிறது. அந்த ஊனம் என்ற வார்த்தை இருக்க கூடாது என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள், ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று ஒரு மாற்றுப்பெயர் சூட்டி மகிழ்ந்தார், தலைவர் கலைஞர் அவர்கள். அவ்வாறு பெயர் சூட்டியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேண்டிய எல்லா சலுகைகளையும் அவ்வப்போது செய்து கொடுத்தார். அவர் முதல் அமைச்சராக இருக்கின்ற போது, ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் ஒரு கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தார்கள். காலையில் 7 மணிக்கு இந்த செய்தியை பத்திரிகையில் படிக்கிறார், தலைவர் கலைஞர் அவர்கள். அப்போது தலைவர் வீட்டில் அவருடைய துணைவியார் அதாவது என் அம்மா தயாளு அம்மாள் அவர்கள் தலைவருக்கு காலை உணவு வைத்துக் கொண்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த காலை உணவு வேண்டாம் என்று சாப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, போலீஸ் பாதுகாப்பு கூட வரவில்லை, தன்னுடைய கார் ஓட்டுனரை அழைத்து உடனே காரை எடுக்கச் சொல்லி நேராக தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேசி, அவர்களை சமாதானம் செய்து, உண்ணாவிரதத்தை கைவிட வைத்து, அதன் பிறகுதான் தலைவர் வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டார். இதுதான் வரலாறு. எனவே அவ்வளவு முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு எல்லாவித தேவைகளையும் அவ்வப்போது செய்து கொடுத்தார் தலைவர் கலைஞர் அவர்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருடைய முதலமைச்சர் துறையோடு, மாற்றுத்திறனாளிகள் துறையையும் சேர்த்து வைத்துக் கொண்டார். அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நான் அவருடைய மகன் ஸ்டாலின். நிச்சயமாக கலைஞர் எந்த அளவிற்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரோ அந்த அளவு குறையாமல், அதைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பேன் என்ற நம்பிக்கையை உங்களுக்கு சொல்லுகிறேன். நிச்சயமாக உங்களுடைய குறைகள் தி.மு.க. ஆட்சியில் தீரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ராஜா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

ராஜா அவர்கள் சொன்னதுபோல, மரக்காணம் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு போதிய இழப்பீடு தொகை அளிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள் என்று ராஜா அவர்கள் இங்கே சொல்லி இருக்கிறார். அவரது புகார் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் இழந்தவர்களுக்கு அவர்கள் கேட்கும்படி சரியான இழப்பீட்டை வழங்குவது அரசின் கடமை. எனவே நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இதைப் பற்றி ஆய்ந்து, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் பயணத்தை ஜனவரி 25 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான் தொடங்கினேன். இதுவரை நான்கு கட்டங்களாக நடந்துள்ள இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இதுவரை 152 தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை மனுக்களாக வாங்கி வைத்துள்ளேன். ஐந்தாம்கட்டப் பயணத்தை இன்று தொடங்குகிறேன். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த மாவட்டத்துக்கு எனது வாழ்க்கையில் எத்தனையோ முறை வந்துள்ளேன். கழக நிகழ்ச்சிக்காக, அரசுப் பணிகளுக்காக என்று எத்தனை முறை வந்திருக்கிறேன் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. இன்று நான் வந்துள்ள நோக்கம் மிக மிக முக்கியமானது.

உங்களின் கவலைகளைக் கேட்டறிவதற்காக வந்திருக்கிறேன். கேட்பதற்காக மட்டுமல்ல, அதனை என்னால் நிவர்த்தி செய்ய முடியும் என்று சொல்வதற்காக வந்திருக்கிறேன். அதுவும் 100 நாட்களில் சரி செய்ய முடியும் என்று சொல்வதற்காக வந்திருக்கிறேன். அதுவும், என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம் என்பதைச் சொல்வதற்காகவும் வந்திருக்கிறேன். தமிழக வரலாற்றில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இது. இந்த திட்டத்தை தொடங்கியதில் இருந்து, என்னைச் சந்திக்கும் ஊடகவியலாளர்கள், இதை எப்படி நிறைவேற்ற முடியும்? என்ற சந்தேகத்தைத் தான் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் நான் சொல்லும் பதில், என்னால் முடியும் என்று சொல்லி வருகிறேன். இந்த ஸ்டாலினால் முடியும் என்று சொல்லி வருகிறேன். கலைஞர் மகன் ஸ்டாலினால் நிச்சயம் முடியும் என்று சொல்லி வருகிறேன்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. தீர்க்க முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. நிச்சயம் தீர்ப்பேன். என்னை நம்பி நீங்கள் உங்கள் மனுக்களை ஒப்படைத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். இந்த மக்கள் பயணத்தின் மகத்தான வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சில ஊடகங்கள் இதனைக் குறை சொல்லி எழுதுகின்றன. அதாவது தி.மு.கழகத்தை குறை சொல்லி எழுதுவதன் மூலமாக பழனிசாமியை திருப்திப்படுத்துகின்றன. ஸ்டாலினை திட்டி எழுதினால் உங்களுக்கு அரசாங்க விளம்பரம் கிடைக்கிறது, பணம் வருகிறது என்றால் திட்டி எழுதிக்கொள்ளுங்கள். அப்போதும் நான் உங்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். ஸ்டாலின் மனு வாங்குகிறார், சில மனுக்களை எடுத்து பேசச் சொல்கிறார், மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டுகிறார், சீல் வைக்கிறார், சாவியை தனது சட்டைப் பையில் போட்டுக் கொள்கிறார். வழக்கமாக இதுதான் நடக்கிறது என்று ஒரு நாளிதழ் எழுதி இருக்கிறது. இது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்றே அவர்களது மூளைக்குள் இன்னும் புரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அனைத்து தொகுதி மக்களிடமும் மனு வாங்க வேண்டும் என்றால் 234 தொகுதியிலும் அதைத்தானே செய்ய வேண்டும்? வேறு என்ன செய்யச் சொல்கிறது அந்த நாளிதழ்? கல்லூரி பேராசிரியர் வருகிறார், பாடம் நடத்துகிறார், தேர்வு வைக்கிறார், பாஸ் போடுகிறார் - இது எல்லாம் ஒரு கல்லூரியா என்று எழுதினால் மூளை வளர்ச்சி இல்லை என்று எப்படிச் சொல்வோமோ அப்படித்தான் அந்த நாளிதழ் எழுதுகிறது. நீங்கள் விமர்சித்து எழுதுங்கள். எழுதுவதன் மூலமாக நாங்கள் சரியாகச் செயல்படுகிறோம் என்று அர்த்தம்.

எப்படியாவது திமுக வெற்றியைத் தடுத்துவிட அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் இப்படி எழுத எழுதத்தான் திமுகவினர் உற்சாகமாக, எழுச்சியாக பணியாற்றுகிறார்கள்.  இன்னும் சில வாரங்களில் இந்த ஆட்சியின் கதை முடியப் போகிறது. இது நம்மைவிட பழனிசாமிக்கு நன்கு தெரியும். அதனால் தான் தினமும் அபத்தமான க்ளைமாக்ஸ் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார். இதுவரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பழனிசாமிக்கு, இப்போதுதான் நாம் முதலமைச்சர் பதவியில் இருக்கிறோம், இந்த நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்டு போகவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, என்று உணர்ந்துள்ளார்.

கல்வெட்டுக்களைத் திறந்து கொண்டு இருக்கிறார். இரண்டு மாதத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியாது. பதவியைக்காலி செய்வதைத் தவிர வேறு எதற்குமே நேரமில்லை இப்போது.

இடைக்கால நிதிநிலை அறிக்கை என்ற பெயரால் ஒரு அறிக்கையை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வெளியிட்டு உள்ளார்கள். ஏராளமான கற்பனை அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் ஏன் கடந்த ஆண்டு வரவில்லை? அதற்கு முந்தைய ஆண்டு எதனால் எழவில்லை? ஆட்சி முடியும் போதுதான் ஞானோதயம் வருகிறதா? தமிழக நிர்வாகத்தை சீரழித்துவிட்டார்கள். நிதி நிர்வாகத்தையும் நிர்மூலம் ஆக்கி விட்டார்கள். பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்த ஒரே வழி, கடன் வாங்குவது.

கடன் வாங்கி கடன் வாங்கி தமிழ்நாட்டின் கடன் தொகையை 5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசு தான் இந்த பழனிசாமி அரசு. அந்தப் பணத்தை தனது பினாமிகளுக்கு டெண்டர் விட்டு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் தான் பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக இருந்துள்ளது. தனது சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து வருகிறார்.

தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து- அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். கொரோனா நிதியிலும் ஊழல் செய்து - உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள்.  தமிழ்நாட்டுப் பக்கமாக அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். தேர்தல் வரப்போவதால் இனி அடிக்கடி வருவார் என்று நான் சில வாரங்களுக்கு முன்னால் சொன்னேன். அதே மாதிரிதான் அவரும் வருகிறார்.கடந்த முறை வந்தவர் ஒரு பக்கம் பழனிசாமி கையையும் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வம் கையையும் தூக்கி காண்பித்தார். இரண்டுமே ஊழல் கைகள். அதைப் பிடிப்பதன் மூலமாக இந்த ஊழலுக்கு தானும் உடந்தை என்பதைப் போல காட்டினார்.

தனது தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறுகுறு தொழில் துறையை மொத்தமாக மோடி சிதைத்துவிட்டார் என்று கோவை, திருப்பூர் வட்டாரத்து வர்த்தகர்களுக்கே தெரியும். எனவே மோடி சொல்வது கடைந்தெடுத்த பச்சைப் பொய் என்பதை அவர்களே சொல்வார்கள்.கொட்டும் பனியில் 90 நாட்களைக் கடந்தும் போராடும் விவசாயிகள் மீது கொஞ்சமும் இரக்கம் பிறக்காத பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வேளாண்மையைக் காக்க வந்த நவபுருஷரைப் போல பேசிவிட்டு போயிருக்கிறார்.தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து தரமற்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து மோடி செய்துள்ள விமர்சனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திமுக ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துபட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என்று சொல்லி இருக்கிறார் மோடி. என்ன ஆதாரத்தை வைத்துக் கொண்டு மோடி இப்படி பேசினார்? அவருக்கு தரப்பட்ட புள்ளிவிவரம் என்ன?

அராஜகத்தை பற்றி யார் பேசுவது? 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை. குஜராத்தை விட்டு மோடி டெல்லிக்கு வந்துவிட்டார் என்பதற்காக அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Related Stories: