போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

விழுப்புரம் :  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.14வது ஊதிய ஒப்பந்தப்படி, ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொமுச, சிஐடியு உள்பட  11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 13 பணிமனைகளில் இருந்து தினசரி  664 பேருந்துகள் இயக்க வேண்டும்.

 திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்க முன்வராத நிலையில், அதிமுக, பாமக, தேமுதிக ஆதரவு தொழிற்சங்க ஊழியர்களுடன் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி பணிமனை 1. பணிமனை 2, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இதில் நகர பேருந்துகள் மற்றும் கிராம பேருந்துகள் என மொத்தம் 239 பேருந்துகள் உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 51 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது சென்னை, சேலம் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு மட்டுமே அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.  

பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, அரசு பேருந்துகள் பெரும்பாலும் ஓடாத நிலையில், தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நகர பகுதிகளில் ஆட்டோக்கள், ஷேர்ஆட்டோக்களிலும் அதிகளவில் பயணிகள் பயணம் செய்தனர்.  கொரோனா, காலத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில் ஊழியர்கள் போராட்டத்தினால் மேலும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக, தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதேபோல் கடலூர் மாவட்டத்திலும் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Related Stories:

>