சிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் கருகி பலி-19 பேர் படுகாயம்

சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ளது. இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நாக்பூர் உரிமம் கொண்ட இந்த ஆலையில் நேற்று மாலை 4.30 மணியளவில், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பதறியடித்து தப்பி ஓடினர்.

அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவத்தொடங்கியது. இதனால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெடி விபத்தில் 15 கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில், படுகாயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 4 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே எலியார்பட்டியை சேர்ந்த வீரராஜ் மனைவி செல்வி (37) என்பவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்கள் உடல் அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு  தொழிற்சாலை உரிமையாளர் தங்கராஜ்பாண்டியன் மற்றும் போர்மேன் ஜெயபால் ஆகிய 2  பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை விருதுநகர்  எஸ்பி பெருமாள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கணேசன்  மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை  நடத்தினர்.சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் பட்டாசு ஆலை விபத்துகள் இப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories:

>