போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை-இயக்கப்பட்ட பஸ்களில் முண்டியடித்த கூட்டம்

மதுரை : மதுரையில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை.

14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். மதுரையில் உள்ள புதூர் உள்பட 12 டெப்போக்களில் டவுன் பஸ்கள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. மொபசல் பஸ் டெப்போக்களிலும் பஸ்கள் வரிசையாகநிறுத்தப்பட்டிருந்தன.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 948 பஸ்கள் உள்ளன. இவற்றில் 98 பஸ்கள் மட்டுமே அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளால் இயக்கப்பட்டன. இதனால் மதுரை சாலையில் அரசு டவுன் பஸ்கள் செல்லவில்லை. மொத்தம் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொமுச மாநில துணைச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறும்போது, ‘‘கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். மதுரையில் பஸ் போக்குவரத்து ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், போராட்டம் முதல்நாளில் வெற்றி கண்டுள்ளது’’ என்றார்.

திருமங்கலம்

திருமங்கலம் பஸ் டிப்போவில் மொத்தம் 95 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று காலை முதல் 20 டவுன்பஸ்கள் மற்றும் ஒரு வெளியூர் பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. தென்மாவட்டங்களிலிருந்து மதுரை மாநகருக்கு வரும் பெருபாலான பொதுமக்கள் திருமங்கலத்தில் இறங்கி மதுரைக்கு டவுன் பஸ்கள் மாறுவது வழக்கம். முகூர்த்த நாளான நேற்று திருமங்கலத்தில் இருந்து டவுன்பஸ்கள் போதுமான அளவு இல்லாததால் தென்மாவட்டத்திலிருந்து மதுரை வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வந்த ஓரிரண்டு டவுன்பஸ்களிலும் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணிகள் பயணம் செய்தனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 44 பேருந்துகளில் நேற்று காலை 10 பேருந்துகள் மட்டுமே இயங்கியது. நேற்று மதியத்திற்கு மேல் 8 பேருந்துகள் மட்டுமே இயங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதியுற்றனர்.

பஸ் முன்பு படுத்து போராட்டம்

அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் கண்டெக்டர் தாழைமுத்து(58) என்பவர் நேற்று காலை வந்தார். அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் பஸ்நிலையம் சென்ற அரசு பஸ் முன்பு திடீரென படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூர் போலீசார் இளங்கோவன், பாண்டி செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தாழைமுத்துவிடம் பேசி அழைத்து சென்றனர்.

Related Stories: