போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 25 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்-தனியார் பஸ்களில் முண்டியடித்த பயணிகள்

விருதுநகர்/திருவில்லி : போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 25 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பஸ்கள் இல்லாததால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.போக்குவரத்து தொழிலாளர்கள் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். தொ.மு.ச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எஸ்டிடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 பணிமனைகள் உள்ளன. 237 டவுன்பஸ்கள், 181 நீண்ட தூர பஸ்கள் என 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 2,724 பணியாளர்கள் 8 பணிமனைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் 8 பணிமனைகளில் 20 முதல் 25 சதவீத பஸ்கள் மட்டும் ஆளும் கட்சி சங்கங்களின் தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்பட்டன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் அனைத்து ஊர்களிலும் மக்கள் விசேஷகளுக்கு செல்ல முடியாமலும், கிராமங்களில் இருந்து நகர்புறங்களுக்கு வரமுடியாமல் தவித்தனர்.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் வந்து செல்ல முடியாத நிலை உருவானது. தனியார் பஸ்களிலும், மினி பஸ்களிலும் இயக்கப்பட்ட ஒரு சில அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணித்தனர். அனைத்து பஸ் நிலையங்களிலும் அதிகாலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

வெளியூர்களில் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், பள்ளி வேன் ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் கிளையில் மொத்தம் 59 பேருந்துகள் உள்ளன. இதில் 11 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. மீதி 48 பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படாததால் திருவில்லிபுத்தூரில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அலுவலர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் கூட்டம் கூட்டமாக காத்து கொண்டு இருந்தனர்.

Related Stories: