×

தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!

சென்னை : தா. பாண்டியன் அவர்களின் வாழ்க்கையும், அவருடைய அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு  ஒரு பாடமாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை என்று முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி

மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தமிழ் மாநில செயலாலருமான சகோதரர் திரு. தா. பாண்டியன் அவர்கள், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, இன்று ( 26.2.2021 ) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த  வேதனை அடைந்தேன்.திரு. தா. பாண்டியன் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே சமூக, அரசியல் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் மாணவராக இருக்கும் போதே, தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுமையாக ஈடுபத்திக்கொண்டு,  மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பேராசிரியர், வழக்கறிஞர், அரசிசில்வாசி, இலக்கியவாசி,  தொழிற்சங்கவாதி, பேச்சாளர், எழுத்தாளர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டு, நன்முத்திரை பதித்தவர் என்ற பெருமைக்குரியவர். அழகு தமிழில் நேர்த்தியான உச்ச்ரிப்பில், தன்னுடைய கருத்துக்களை ஆளுமையுடன் வெளிப்படுத்துவதிலும், விவாத களத்தில் மக்களை ஈர்த்ததோடு, மாற்றாரையும் செவிமடுக்கச் செய்து, தான் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமை சேர்த்தவர். தமிழக அரசியலில் தனி முத்திரை பதித்தவர்.சகோதரர் திரு. தா. பாண்டியன் அவர்கள் பாரதியாரை பொதுவுடைமைக் கவிஞராக அடையாளம் காட்டியதில் தனி முத்திரை பதித்தவர். இவர் நாடாளுமன்றத்தில் தனது வாதங்களை திறம்பட எடுத்து வைத்தவர் என்ற சிறப்புக்குரியவர்.

சகோதரர் திரு. தா. பாண்டியன் அவர்கள் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவர். சகோதரர் திரு. தா. பாண்டியன் அவர்களின் வாழ்க்கையும், அவருடைய அனுபவங்களும்    இளம் தலைமுறையினருக்கு  ஒரு பாடமாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை.சகோதரர் திரு. தா. பாண்டியன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisami Pariansali , முதல்வர் பழனிசாமி
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...