×

தஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்

ஒரத்தநாடு : தஞ்சை மாவட்ட சுற்றுப்பகுதிகளில் மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்திற்காகவும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கிடை மாடுகளை அழைத்து வந்துள்ளனர்.வயல்களில் கிடை போடும் தொழிலை கொண்டவர்களை கிதாரி என்பார்கள். அவர்கள், கிராமத்திலுள்ள 200 மாடுகளுக்கு மேல் ஒன்று சேர்த்துக்கொண்டு ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மட்டும், மேய்ச்சலுக்காக, காவிரி பாசனப் பகுதிக்கு வருவார்கள்.

இப்பகுதியில் குறுவை, சம்பா அறுவடை முடித்த பின் வயல்களைக் கொஞ்ச காலத்துக்கு ஆறப்போடுவார்கள். இதில் சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பின், ஒரு அடி நீளத்துக்கு அடித்தூர் இருக்கும், இதை மாடுகள் விரும்பி உண்ணும். மாடுகளைப் பகல் முழுவதும் மேய விட்டுவிட்டு, ஒரு வயலில் கிடை போடுவார்கள்.

மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால், அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது.தற்போது, தஞ்சை மாவட்ட பகுதியில் ஏராளமான விவசாயிகள், மேய்ச்சலுக்காக கிடை அமைத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படும் கிடைக்கு தேவையான மாடுகள், அப்பகுதியில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதாலும், கோடை காலத்தில் இரை கிடைப்பது அரிது என்பதால், இப்பகுதி–்க்கு கொண்டு வருகிறார்கள்.

மேலும் பல ஆண்டுகளாக பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் கிடைக்கு அனுப்பிவைப்பார்கள். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்துக் கன்றுகளை ஈனும். வயலிகளில் ஒரு நாள் இரவு கிடை போடுவதற்கு ஒரு மாட்டுக்கு ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஒரு கிடையில் 500 மாடுகள் வரை இருக்கும்.

மாடுகள் கிடை போட்ட வயலை ஒரு வாரம் கழித்து உழுது போட்டால் இயற்கை உரமாக மாறும். ஈரம் இருக்கும்போது அந்த வயலில் பசுந்தாள், சனப்பு, கொழுஞ்சி ஆகிய செடிகளைத் தெளித்துவிட்டுப் பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழுதால் வயலுக்கு நல்ல உரம் கிடைக்கும்.

இது குறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில்,அதிக விளைச்சலுக்காக, வயலில் ரசாயன உரங்களை தெளித்து மண்ணை மலடாக்கிவிட்டோம். இப்போது நிலங்களில் இயற்கை வளம் குறைந்து விட்டது.

தற்போது தேவையான வளத்தை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை உரத்திற்காகவும், அதிக விளைச்சலுக்காகவும், ஆடு, வாத்து, மாடுகளை கிடை போடும் பழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது. ஆடு கிடை போட்டால் அந்த ஆண்டே லாபம், மாடு கிடை போட்டால் மறு ஆண்டு லாபம் என்பது கிராமத்து பழமொழி. தற்போது கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் கிடை போடுவது தொடங்கியுள்ளது என்றார்.

Tags : Ramanadhapura ,Tanjai , Orathanadu: Horizontal cows from Ramanathapuram district for grazing and natural manure around Tanjore district.
× RELATED தஞ்சை மாவட்டத்தில் காற்றுடன் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி