சாலை பணியின் போது குழாய்கள் துண்டிப்பு காலிகுடங்களுடன் பிடிஓ ஆபீசை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி மாற்றுத்திறனாளிகள் காலனியில் 37 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் 6 இடங்களில் தெரு குழாய்கள் அமைத்து, குடிநீர் விநியோகித்து வந்தனர். சமீபத்தில் இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது 5குழாய்கள் துண்டிக்கப்பட்டது. ஒரே ஒரு குழாயில் 37 குடும்பங்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. குழாயடியில் காலிகுடங்களுடன் காத்து கிடந்து, தண்ணீர் பிடிப்பதில் அவர்களின் உடல்வாகு ஒத்துழைக்கவில்லை. பெரிதும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல் தலைமையில், நேற்று மாற்றுத்திறனாளிகள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு, பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துண்டிக்கப்பட்ட குழாய்களை சீரமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: