×

தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் 90 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தம்-தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்

சிவகங்கை : போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பயன் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் அறிவித்தன. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊழியர்கள் பஸ்களை பணிமனைகளில் கொண்டு வந்து நிறுத்த தொடங்கினர்.

நேற்று அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தும் ஊழியர்கள் வராததால் பணிமனைகளிலேயே நின்றன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் பணிமனை உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில் 159 ரூட் பஸ்கள், 146 டவுன் பஸ்கள் உள்பட சுமார் 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஆயிரத்து 200 தொழிலாளர் பணியில் உள்ளனர்.

இதில் மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் 30 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 90 சதவீத பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.
பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிடைக்கும் வாகனங்களில் செல்லத் தொடங்கினர். மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே தனியார் பஸ்கள், வேன்கள் சென்றன. மற்ற பகுதிகளுக்கு செல்ல பஸ்கள் இல்லை. சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்கள் இல்லாமல் தனியார் பஸ்கள் மட்டுமே நின்றன.

தனியார் டூரிஸ்ட் பஸ்கள், மினி பஸ்கள் அனைத்தும் பல்வேறு வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்பட்டன. இதை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது. டவுன் பஸ் இயங்கும் வழித்தடங்களில் ஷேர் ஆட்டோ, மினி வேன்கள் இயங்கின. அனைத்து போக்குவரத்து பணிமனையிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Sivagangai: Wage hike for transport workers and cash arrears for retirees
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்