×

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறைந்த அளவில் பேருந்து இயக்கம் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்

நாகை : ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்பட்டனர். மேலும் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

நாகை மண்டலத்தில் உள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி என 11 பணிமனைகளில் இருந்து 521 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 112 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் இருந்து 217 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் 50 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 48 பஸ்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 14 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாகை மண்டலத்தில் இருந்து 90 சதவீத பஸ்கள் இயக்கவில்லை. சொற்ப அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் ஆகிய இடங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அவதியடைந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பஸ்கள் கிடைக்காததால் நீண்ட நேரம் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. பஸ்கள் இல்லாத காரணத்தால் நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து குறிப்பிட்ட தூரங்களுக்கு ஆட்டோக்களில் ஏறி சென்றனர்.

நேற்று முகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு செல்ல வந்தவர்கள் பஸ்கள் இயங்காததால் குடும்பத்தோடு காத்திருந்தனர். நாகையில் இருந்து புதுச்சேரி, சென்னை, மதுரை என நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும் நாகை பஸ்ஸ்டாண்ட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

பஸ்ஸ்டாண்ட் மற்றும் பணிமனைகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகையில் இருந்து தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. மயிலாடுதுறை, சீர்காழி, பொறையார் அரசு கழக பணிமனைகளில் இருந்து 134 பேருந்துகளில் 21 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

மயிலாடுதுறை பணிமனையில் இருந்து 8 பேருந்து, சீர்காழி பணிமனையில் இருந்து 10 பேருந்து,பொறையார் பணிமனையில் இருந்து 3 பேருந்து மட்டுமே இயக்கப்பட்டது. அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பயணிகளின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

Tags : Nagai: Most government buses have been hit by a strike by transport workers demanding the start of wage hike negotiations
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்