நெல்லை டவுன் பள்ளியில் மாணவர்களுக்கு திறனறிவு போட்டி

நெல்லை : நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான திறனறிவு போட்டிகள் இணையதளம் வாயிலாக நெல்லை டவுன் பாரதியார் உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடந்தது.

மாணவர்கள் பாடப் புத்தகங்களை தாண்டி தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், புதிய மற்றும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவும், ஆழமான விவாதம் செய்யக்கூடிய சூழல் மற்றும் குழு மனப்பான்மை உருவாக்கவும், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கும், மாணவர்களின் முழு ஆளுமைத் திறனை வளர்க்க வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

புத்தக வாசிப்பு, மனிதநேயம், ஆரோக்கிய உணவு, நவீன காலத்தில் அறத்தின் வடிவங்கள், சுய ஆளுமை மற்றும் சமூக வளர்ச்சி குறித்த பேச்சுப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல், நவீன கால கல்வியின் போக்கு, பல்லூடக பயன்பாடு, தமிழர் பண்பாடு குறித்தான கட்டுரைப் போட்டிகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு சிறந்த முதல் மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.

ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜன், தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி, கணினி ஆசிரியர் நெல்சன், வெங்கடாசல பெருமாள், அப்துல்காதர் ஆகியோர் செய்திருந்தனர். நடுவர்களாக ஆசிரியர்கள் கணபதி சுப்பிரமணியன், பாக்கியநாதன், தெய்வராணி, பட்டன், தாமோதரன், கோயில் பிச்சை ஆகியோர் செயல்பட்டனர்.

Related Stories: