சாலை பராமரிப்பு பணியால் தேரோட்டம் ரத்து திருச்செந்தூர் மாசி திருவிழாவில் இன்று ரத உற்சவ வைபவம்-நாளை தெப்ப உற்சவம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் ரதவீதிகளில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று மாசித்திருவிழா தேரோட்டத்திற்கு பதிலாக ரத உற்சவம் நடக்கிறது.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

5ம் திருவிழாவான 21ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையாகி குமரவிடங்க பெருமானும், தெய்வானையும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளினர். 6ம் திருவிழாவில் சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளினர். 7ம் திருவிழாவில் அதிகாலை கோயிலில் சண்முகப்பெருமான் உருகு சட்டசேவையும், சுவாமி சண்முகர் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் தங்கச்சப்பரத்தில் சிவப்புசாத்தியில் எழுந்தருளினார்.

8ம்திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்திலும் எழுந்தருளினர்.

9ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தது. பகல் 11.30 சுவாமி குமரவிடங்கப் பெருமான், அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் எழுந்தருளி 9ம் திருவிழா மண்டபத்தை சேர்ந்தது. அங்கு பலவகையான அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையாகி சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலாவந்தது.

திருச்செந்தூர் ரதவீதிகளில் சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் 10ம் திருவிழாவான இன்று (26ம்தேதி) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வழக்கமான தேரோட்டத்திற்கு பதிலாக ரத உற்சவம் நடக்கிறது. சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் செப்பு தேரிலும், விநாயகர் மரத்தேரிலும் உலா வருகின்றனர்.

வழக்கமான பெரிய தேர்களில் சுவாமி, அம்பாள், விநாயகர் எழுந்தருளாததால் இதை ரத உற்சவம் என பக்தர்கள் அழைக்கின்றனர். 11ம் திருவிழாவான நாளை 27ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 28ம் தேதி 12ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர் கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Related Stories: