ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை இன்று மாலை சுமார் 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகளை குறித்து ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 10, 11  ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்துக்கு துணை ராணுவப் படையினர் அனுப்பட்டுள்ளனர். தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக 5 மாநில தலைமைத் தேர்தல்  அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுடன் நடத்திய ஆலோசனையில், தேர்தல் முன்னேற்பாடுகள்,  பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய உள்துறை  மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  அச்சமற்ற,  நியாயமான சூழலில் 5 மாநிலத்தில் தேர்தலை நடத்த  ஆணையம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேற்குவங்கத்தில் அதிகளவில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதால், அம்மாநிலத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். அசாமில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், 2011  மற்றும் 2016ம் ஆண்டுகளில் மாநில சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெற்றது. ஆனால் தற்போது 7 கட்டங்களாக நடக்கும். பீகாரில் பின்பற்றப்பட்ட ெகாரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின்படி 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: