வாணியம்பாடி அருகே மஞ்சு விரட்டு போட்டி காளைகள் முட்டியதில் 10 பேர் படுகாயம்

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் 200 காளைகள் பங்கேற்று ஓடின. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆந்திரா உட்பட வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

இந்நிலையில் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை கடந்த மதனாஞ்சேரி சூப்பர் ஸ்டார் காளைக்கு முதல் பரிசான ₹1 லட்சத்தை தட்டிச்சென்றது. மேலும், 2வது பரிசு ₹70 ஆயிரம், 3ம் பரிசு ₹50 ஆயிரம் உட்பட 41 பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

நெடுஞ்சாலையில் சீறிய காளை

ஆந்திரா வீரணமலை  பகுதியிலிருந்து கிரி சமுத்திரம்  மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க அழைத்து வந்த காளை  திடீரென மிரண்டு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் புதூர்  பகுதியில்  இளைஞர்கள் ஒன்று திரண்டு அந்த காளையை பிடித்தனர். அப்போது சாலையில் இருந்த இருசக்கர வாகனம் சேதமானது. இதனால் காளை உரிமையாளரிடம் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: