×

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அரசு பஸ்கள் இயங்காததால் தனியார் பஸ்களில் நிரம்பி வழிந்த பயணிகள்-விதிமீறி அதிக பயணிகளை ஏற்றியதால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியால் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் தனியார் பஸ்களை தேடி பயணிகள் சென்றனர். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் விதி மீறி அதிக பயணிகளை ஏற்றி வசூல் வேட்டையில் இறங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறைக்கான 7 கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து போக்குவரத்து சங்க ஊழியர்களும் இணைந்து 2019ல் இருந்து ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து பேருந்தை இயக்க மாட்டோம் என்று அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலம் மற்றும் விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட திமுக தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம், பணியாளர் தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கம், மனித உரிமைகள் தொழிற்சங்கம் போன்ற  தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மொத்தம் உள்ள 165 பேருந்துகளில்  ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிற்சங்க ஓட்டுனர்கள் மற்றும்  நடத்துனர்களால் 25 பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட பேருந்துகள் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் பேருந்துகள் விதிமுறையை மீறி படிக்கட்டுகளில் கூட பொதுமக்களை தொங்க வைத்துக் கொண்டு பேருந்துகளை இயக்கி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மேலும் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், கோவை, திருப்பூர் என பல்வேறு பகுதிகளுக்கு 174 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பஸ் ஸ்டிரைக் காரணமாக நேற்று வெறும் 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. அதுவும் சென்னை, ஏலகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்பட்டதால் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். இருப்பினும் தனியார் பஸ்கள் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து இயக்கப்பட்டன.

அதேபோல் குக்கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பஸ்கள் வராததால் கடும் அவதியடைந்தனர். ஆங்காங்கே ஷேர் ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்களில் லிப்ட் கேட்டு பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
பள்ளிக்கு செல்ல முடியாமல்தவித்த மாணவர்கள்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கொம்மேஸ்வரம், கட்டவாரப்பள்ளி, சாத்தம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். இவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரகோயில் பஸ் ஸ்டாப் பகுதியில் காத்திருந்தனர். ஆனால் அவ்வழியாக வந்த மாதனூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் டவுன் பஸ்கள் மாணவர்களை பார்த்ததும் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தனர். மேலும் ஷேர் ஆட்டோவில் போகவர ₹40 கட்டணம் செலுத்தவேண்டி இருந்ததால் காசு இல்லாமல் ஏமாற்றத்துடன் பள்ளிக்கு செல்லாமல் தங்கள் வீடுகளுக்கே திரும்பினர்.இதேபோல் ஆம்பூரில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags : Tirupati: Government buses in Tirupati district are not running due to protests by transport workers.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...