×

மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் நிர்பந்திக்கக் கூடாது.. அவளும் ஒரு உயிர் தான் : உயர்நீதிமன்றம் அதிரடி!!

மும்பை : திருமண உறவில் மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவான்மார்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டீ போட்டுக் கொடுக்காததால் மனைவியை அவளின் கணவரை சுத்தியால் அடித்துக்கொலை செய்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மொஹைத், தேரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கொலை செய்த நபரின் ஜாமின் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, அந்த நபர் மனைவியைச் சுத்தியால் அடித்துக்கொலை செய்திருக்கிறார். பின் தடயங்களை அழிக்க கொட்டிக்கிடந்த ரத்தங்களைச் சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடியிருக்கிறார். இதை அனைத்தையும் நேரில் பார்த்த சாட்சியாக அவரின் 6 வயது மகள் சாட்சி சொல்லியிருக்கிறாள். இதனால் அவர் கொலையாளி என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மனைவி என்பவள் ஒரு பொருளோ அல்லது உங்களின் தனிப்பட்ட உடமையோ கிடையாது. அவளும் உங்களைப் போல ஒரு உயிர் தான். ஆண், பெண் பணிகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. மனைவி என்பதாலேயே அவர் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்க்கிறார். அப்படியான எண்ணம் மிகவும் தவறானது. அவ்வாறு மனைவியிடம் எதிர்பார்க்கக் கூடாது. பாலின ஏற்றத்தாழ்வுகளுடன் அடிபணிய வேண்டும் என்ற நோக்கமும் எதிர்பார்ப்பும் இணையும்போது கொலைகளும் துன்புறுத்தல்களும் அரங்கேறுகின்றன. இங்கு நிலவும் சமூகக் கட்டமைப்புகள் ஒரு பெண் தன்னை முழுவதுமாக கணவனிடம் ஒப்படைக்க வைக்கின்றன.

இதன் காரணமாகவே திருமண உறவில் கணவர்கள் தாங்கள் தான் முதன்மையானவர்கள் என்று கருதுகின்றனர். இதனால் மனைவிமார்களைத் தங்களின் உடமைகளாகக் கருதி தங்களின் விருப்பப்படி ஆட்டுவிக்கின்றனர். இதற்கு முழுமுதற் காரணம் ஆணாதிக்கமே தவிர வேறு அல்ல. இந்த அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று கூறினார்.இதையடுத்து வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : உயர்நீதிமன்றம்
× RELATED விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக...