இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக காஸ் சிலிண்டர் மேலும் ₹25 அதிகரிப்பு

சேலம், பிப்.26: வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று மீண்டும் ₹25 உயர்த்தப்பட்டது. காஸ் சிலிண்டரின் நடப்பு மாதத்திற்கான விலை உயர்வு கடந்த 4ம் தேதி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை ₹25 உயர்த்தப்பட்டது.   2வது முறையாக கடந்த 15ம் தேதியும் ₹50 உயர்த்தப்பட்டது.   இந்நிலையில், நேற்றும் 3வது முறையாக நேற்றும் திடீரென ₹25 உயர்த்தப்பட்டது.

 இதனால், நேற்று முன்தினம் வரை வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் ₹785க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ₹25 உயர்ந்து ₹810 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

 சேலத்தில் ₹803ல் இருந்து ₹828 ஆக உயர்ந்தது. இதுவே டெல்லி, மும்பையில் ₹794 ஆகவும், கொல்கத்தாவில் ₹820.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலையை நேற்று ₹5 குறைத்துள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை இந்த  மாதத்தில் மட்டும் ₹100 உயர்ந்துள்ளது. இது, சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

புதிய விலைப்படி வசூல்

சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பதற்கு முன்பு சிலிண்டர் முன்பதிவு செய்தவர்களுக்கு, சிலிண்டர் டெலிவரி செய்வதற்கு முன்னதாக கேஷ்மெமோ விவரம் பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ்சில் அனுப்பப்படும். அந்த தொகையை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், கேஷ்மெமோ உருவாக்கிய பிறகும், புதிய விலையின்படி பில்தொகையை செலுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன. அதிலும், ஆன்லைன் முறையில் பணம் கட்டியவர்களுக்கு இன்வாய்ஸ் (பில்) உருவாக்கிய பிறகும் இவ்வாறு கூடுதல் தொகை கோரி வந்தது, கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>