₹13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

லண்டன், பிப். 26: வங்கி கடன் மோசடி வழக்கில் இங்கிலாந்துக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடையில்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக ₹13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச்சில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு, வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அவர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜராகி வந்தார். இந்த வழக்கில், நீரவ் மோடி சார்பில் பலமுறை ஜாமீன் கோரப்பட்டும், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூசி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ``தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்தால் நீதி கிடைக்காது என நீரவ் மோடி கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதின் மூலமாக, மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில் திருப்தி அடைகிறேன். இந்த வழக்கு தொடர்பாக இந்தியாவில் நடைபெறும் விசாரணைக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். எனவே, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை,’’ என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீதி படேலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒப்பந்தப்படி, 2 மாதங்களுக்குள் முடிவெடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தீர்ப்பின் மீது இரு தரப்பினரும் மேல்முறையீடு செய்வதற்கு தடை இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதால், உள்துறை அமைச்சரின் முடிவு தெரிந்த 14 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>