×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்கம் உடைந்தது: புதிய லிங்கம் வைத்ததில் ஆகம விதிமீறல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான ஸ்படிக லிங்கம் உடைந்து சேதமானது. இதையடுத்து புதிய லிங்கம் வைக்கப்பட்டதில் ஆகம விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு சுவாமி சன்னதியில் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும். கோயில் நடைதிறப்பிற்குப் பின் முதலாவதாக நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் லிங்கத்திற்கு பசும்பாலினால் அபிஷேகம் செய்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேக பால் வழங்கப்படும்.

இந்த ஸ்படிக லிங்கம் 2 நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து உடைந்து விட்டதாக தகவல் பரவியது. கருவறைக்குள் எது நடந்தாலும் சன்னதியில் பூஜை காரியங்களில் ஈடுபடும் மகாராஷ்டிர குருக்களுக்கு மட்டுமே தெரியும். மேலும் சன்னதியில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் இவர்கள் மூலமாகவே கோயில் நிர்வாகம் மற்றும் வெளிநபர்களுக்கு தெரியவரும். இதுபோன்ற நிலையில் சுவாமி சன்னதி கருவறைக்குள் ஸ்படிக லிங்கம் உடைந்து சேதமடைந்ததாக தகவல் பரவியதால் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஸ்படிக லிங்கம் உடைந்த அதேநாளில், சங்கர மடம் பொறுப்பில் உள்ள விஜயேந்திரர் கோயிலுக்கு தரிசனம் செய்து சென்றார்.

அப்போது அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் சென்றார். இதன்பிறகு கடந்த 2 நாட்களாக ஸ்படிக லிங்க தரிசனம் நிறுத்தப்பட்டது. இந்நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். புதிய லிங்கம்: இந்தநிலையில் சேதமடைந்த ஸ்படிக லிங்கத்திற்கு பதிலாக, புதிதாக 2 கிலோ எடையுடன், 9 இஞ்ச் உயரம் கொண்ட புதிய ஸ்படிக லிங்கத்தை கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த சுவாமிகள், ராமநாத சுவாமி கோயிலுக்கு வழங்கினார்.

இதனையடுத்து ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்திலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு இந்த புதிய ஸ்படிக லிங்கம் எடுத்துச் செல்லப்பட்டு, காசி விஸ்வநாதர் சன்னதி முன்பாக சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டது. பின்  தீபாராதனை நடத்தி பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று முன்தினம் இரவு இந்த லிங்கம் கோயிலுக்கு வழங்கப்பட்டது.

ஆகம விதிமீறலா: இதற்கிடையில், ஸ்படிக லிங்கம் எப்படி உடைந்தது, ஏன் புதிய லிங்கம் மாற்றப்பட்டது, ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தி, இந்த மாறுதல் செய்யப்பட்டதா என  பல்வேறு சந்தேகக் கேள்விகள் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை செய்து ஸ்படிக லிங்கத்தை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Spatika Lingam ,Rameswaram Ramanadaswamy Temple ,Lingam , Rameswaram Ramanathaswamy The crystal lingam in the temple was broken: in placing the new lingam ஆகம விதிமீறல்; take action Emphasis
× RELATED சித்தலிங்கங்கள்