புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று மாலை முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து  உத்தரவு வெளியானது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, முதல்வர், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் கொடுத்தார். இதன்பின், சபாநாயகரின் அறிக்கை, அமைச்சரவை ராஜினாமா உள்ளிட்ட அனைத்து விவரங்களை அறிக்கையாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்த பிரகடனத்தில், ‘‘கடந்த 22ம் தேதி புதுச்சேரி கவனர்னரிடமிருந்து அறிக்கை கிடைத்தது. பிற தகவல்கள் மற்றும் அறிக்கையை பரிசீலித்த பிறகு, திருப்திகரமாக இருந்தது. எனவே புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963 பிரிவு 20ன்படி புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தை  முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 51ன்படி அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதால் புதுச்சேரி அரசு நிர்வாகத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேரடியாக கவனிப்பார். சட்டசபை தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும்.

Related Stories: