கேரள எல்லையை மூட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்: ‘கொரோனா பரவலை காரணம் காட்டி கேரள எல்லையை மூடுவதற்கு கர்நாடக அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது?’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கேரளாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையை கர்நாடக அரசு மூட உத்தரவிட்டது. இதையடுத்து, எல்லையில் உள்ள 13 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.  இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் செயலாளர் சுப்பையார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியுள்ளதால் கேரளாவில் இருந்து வருகிறவர்கள் அவதி அடைகின்றனர். எனவே, எல்லையை திறக்க உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியிருந்தார்.

 மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘ஊரடங்கு சட்டத்தின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டபோது மாநிலங்களுக்கு இடையே எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி கேரள எல்லையை கர்நாடகா மூடியது தவறாகும். எல்லையை மூடுவதற்கு கர்நாடக அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பி உள்ளது.  இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக சுகாதாரத் துறை, தெற்கு கர்நாடகா பேரிடர் மீட்பு அமைப்பு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>