×

வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்

புதுடெல்லி: வீடு கட்டித்தருவதாக கூறி ரூ.2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரரை தமிழ்நாட்டில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். டெல்லி துவார்க்கா பகுதி 23ல் உள்ள போச்சனூர் கிராமத்தில் ராணுவ வீரர்கள் நலவாரிய வீட்டுவசதி திட்ட அமைப்பு என்ற பெயரில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்னையா(46) என்ற தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் இதை தொடங்கினார். 2012ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு அடுக்கு மாடியிலும் 16 வீடுகள் கட்டப்பட்டன. இதில் வீடு கேட்டு பலர் முன்பணம் கொடுத்தனர். 2014ம் ஆண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முன்பணம் கொடுக்காத மற்ற நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த போது பொன்னையா தலைமறைவாகி விட்டார். அவர் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் திருவாரூர் வந்து தேடி பார்த்தனர். அவர் சிக்கவில்லை. எனவே 2018ம் ஆண்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் தேடுதல் வேட்டை நடத்திய போது திருச்சியில் அவர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போது அவர் புதுக்கோட்டை பகுதிக்கு சென்றுவிட்டார். அங்கு வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

Tags : Tamil Nadu , Former Army soldier arrested for swindling Rs 2.50 crore for building a house
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...