பராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு

புதுடெல்லி: பராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒரு மாதத்திற்கு மூடப்படுகிறது. இது கோடையில் டெல்லி குடிநீர் சப்ளையில் கால் பங்கு நீர் விநியோகத்தை பாதிக்கும் என்று டெல்லி குடிநீர் வாரிய துணைத் தலைவர் ராகவ் சதா தெரிவித்தார். டெல்லியில் கோடைகாலத்தில் குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவகையில் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. குறிப்பாக குடிநீர்வாரிய துணைத்தலைவர் ராகவ் சதா எம்எல்ஏ அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தி வந்தார். குடிநீர்சப்ளை பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் இருந்து யமுனையில் அதிக அளவு அம்மோனியா கலந்த நீர் வருவது குடிநீர் சப்ளையை பாதித்தது. அதே நேரம் உத்தரகாண்ட் வெள்ளத்தால் டெல்லிக்கு குடிநீர் கொண்டு வருவது தடைபட்டது. அந்த கால்வாய் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது.

இதையடுத்து கால்வாயை பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தநிலையில் நங்கல் ஹைடல் கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுமார் 1 மாதம் இந்த பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவால் டெல்லியில் குடிநீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்படும் என்று மத்திய அரசுக்கு ராகவ் சதா எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:நங்கல் ஹைடல் கால்வாயை திடீரென ஒருமாதத்திற்கு பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் கண்மூடித்தனமாக மூடுவது மார்ச்-ஏப்ரல் மாதங்களில் டெல்லி குடிநீர் சப்ளையை கடுமையாக பாதிக்கும். தற்போது பியாஸ் ஆற்றில் இருந்து டெல்லிக்கு 232 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்) நீர் விநியோகத்தை பாதிக்கும்.

இது டெல்லியில் 25 சதவீத நீர் விநியோகமாகும், மேலும் இது எப்போதும் இல்லாத வகையில் நீர் நெருக்கடியை உருவாக்குவதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் ஏற்படுத்தும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் நெருக்கடி தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க பியாஸ் நதியில் இருந்து தண்ணீர்சப்ளை பெறும் அனைத்து மாநிலங்களின் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>